திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறியதாவது[1]: “நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். மேலும் இவ்விவகாரத்தில் பிரதமரின் நோக்கம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளோம். நீதிமன்றத்தையும் அதன் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் லட்சுமண ரேகை என ஒன்று உள்ளது. அதனை அரசின் அனைத்து அமைப்புகளும் மதிக்க வேண்டும். நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும். எங்களிடம் தெளிவான எல்லை நிர்ணயம் உள்ளது. அந்த லட்சுமண ரேகயை யாரும் கடக்கக்கூடாது,” இவ்வாறு கூறினார்[2]. அப்பிரிவு தேவயில்லை என்ற படசத்தில், இன்னொரு சட்டம் உருவாக்கப் படும். ஏனெனில், தேசத்துரோக கருத்துகள், வேலைகள், தீவிரவாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறகு அவற்றைக் க்ட்டுப் படுத்த, தடுக்க, தீர்க்க்க, தண்டிக்க நீதிமன்றம், அரசு, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும் என்று கவனிக்க வேண்டும்

பிரிட்டிஷ் கால சட்டங்களில் ஒன்று தேச துரோக சட்டம்[3]. இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது[4]. இதில் மத்திய, மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. இச்சட்டத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் உள்ளன. கடந்த திங்களன்று (மே 09) இம்மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கோர்ட், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ”அரசின் பரிசீலனை முடியும் வரை தேச துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் பிரிவு 124ஏ-வை பயன்படுத்தி வழக்கு பதியாது என நம்புகிறோம். தேச துரோக வழக்கின் கீழ் உள்ள விசாரணைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் கூறினர்.

இந்தியாவில் தேசத்துரோக சட்டம், முந்தைய வழக்குகள்: பிரிடிஷ்-இந்திய அரசுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்’ என்று அழைக்கப் பட்டனர், அதில், விடுதலை போராளிகளும் அடங்குவர். பகத்சிங் போன்றவர்கள் தேசத்துரோகிகள் எனராங்கிலேயர் அரசு முத்திரைக் குத்தியது. தேசத் துரோக வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, யங் இந்தியா இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதியபோது, காந்தி மீதும் `யங் இந்தியா’ வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. “இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு இச்சட்டப் பிரிவு 124ஏ ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம் எனத் தெரிவித்தார். இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரிடிஷ்-இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். தேசத் துரோக வழக்கில் வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908 முதல் 1912 முடிய வரை சிறையில் அடைக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 2010-இல் எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் எழுதியதற்கு தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

பிரிவு 124 ஏ–க்கு ஆதரவான கருத்துக்கள்: இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ தேசப் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது’ என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில், காஷ்மீரத்தில் தேசவிரோத குழுக்கள் வெளிப்ப்டையாகவே, ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 03-07-2019 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “எந்தக் காரணத்தைக் கொண்டும் தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்படாது, தேச விரோத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

பிரிவு 124 ஏ–க்கு எதிர் கருத்துகள்: தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது’ என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. “தேசத்துரோக வழக்கை வைத்து இந்தியர்கள் மீது அடக்குமுறையை ஏவிய, பிரிட்டன் தன் நாட்டில் தேசத்துரோக சட்டத்தையே ரத்து செய்து விட்டது. இந்தியாவில் இந்தச் சட்டம் இன்னும் பயன்பாட்டில் இருப்பது ஏன்?,” என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.

கேதார் நாத் சிங் வழக்கும், தீர்ப்பும்: தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது.

வினோத் துவாவின் விமர்சனம், அரசியல் ரீதியிலான முறையீடு: தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும்[5]. வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையில், அரசியல் இருப்பது வெளிப்பட்டது. சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை[6].
© வேதபிரகாஷ்
15-05-2022

[1] தினமலர், லட்சுமண ரேகையை கடக்க வேண்டாம்:சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து மத்திய அமைச்சர்,மாற்றம் செய்த நாள்: மே 11,2022 19:06
[2] https://m.dinamalar.com/detail.php?id=3027322
[3] தினகரன், தேச துரோக சட்டம் மறு பரிசீலினை: ஒன்றிய அரசு, 2022-05-09@ 16:05:06.
[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=763940
[5] தமிழ்.இந்து, தேசத் துரோகம் என்னும் காலனிய எச்சம்!,, செல்வ புவியரசன், Published : 09 May 2022 06:46 AM; Last Updated : 09 May 2022 06:46 AM
[6] https://www.hindutamil.in/news/opinion/columns/797680-treason-1.html
