கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (4)!
திருவள்ளுவரை ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் என்று சாயம்பூசி, அதிகாரப் பூர்வமாக்கி அரசு இயந்திரத்தின் மூலம் பரவச் செய்தால் ஏற்படும் கேடு பன்மடங்காகி விடும்: வீரமணி தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கிறார், “இதில் திருவள்ளுவரின் திருக்குறளில் இல்லாத மோட்சம் – “வீடு” இருப்பதாக தவறாக விளக்கமும் கூறி திரிபுவாதம் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய கோணத்தில் மத்திய அரசு திருவள்ளுவரை ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் என்று சாயம்பூசி, தம் இச்சைபோல வளைத்து விடவோ, திருவள்ளுவர் பிறப்புப்பற்றிய தவறான – அருவறுக்கதக்க கதைகளை கூறி, அவற்றை அதிகாரப் பூர்வமாக்கி அரசு இயந்திரத்தின் மூலம் பரவச் செய்தால் ஏற்படும் கேடு பன்மடங்காகி விடும். எனவே, விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினையும், ஏனையோரையும் எச்சரிக்க வேண்டியது நமது முக்கிய கடமையாகும்”, இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். அரசு ஆவணங்களில் இந்து என்றுதான் போட்டுக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர், பிறகென்ன, இந்த வெத்துவேட்டு வெங்காயம் / எதிர்ப்பெல்லாம் என்று கருப்புச்சட்டைகள் புரிந்து கொள்ளவேண்டும்[1]. பகுத்தறிவு-சுயமரியாதை திருமணமே இந்து திருமண சட்டத்தில் ஐக்கியமானதும் நினைவு கூரத்தக்கது[2].
கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்ட னையும் எங்களுக்குத் தெரியும்!: வீரமணியை கடந்த ஆண்டுகளில் அதிகம் பாதித்துள்ளது ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா தான்! 2013ல் இப்படி பிதற்றியுள்ளார்[3], ஒரு கூட்டத்தில் பேசியது இப்படியுள்ளது, “உங்களுக்கு என்ன தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஆக, எங்கள் கிருஷ்ணனைப்பற்றி பேசிவிட்டார்களா என்று நீங்கள் கேட்கிறீர்கள். கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஏனென்றால், நீ கிருஷ்ணன் என்று சொல்கின்ற கடவுளைப்பற்றி, உன் மூக்கை சொறிந்து, திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள் யாரோ!” பாவம், அந்த அளவுக்கு குற்றம் கண்டுபிடிக்க கீதை பற்றி ஆராய்ச்சியே செய்துள்ளார் போலும்.
கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும்: வீரமணி பொறிந்து தள்ளினார், “இன்னும் சில பேர் வழக்கு போடுவோம் என்று சொல் கிறார்கள். போடுங்கள்! உங்கள் வழக்கைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போதுதான், கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும். உன்னாலே வர முடியுமானால், வழக்கு போடுங்கள்!ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம்! கோர்ட்டில், நாங்கள் ஆதாரபூர்வமாக, கிருஷ்ணன் செய்த லீலைகளைப் படமாகப் போட்டு, குளத்தில் பெண்கள் எல்லாம் பாதி நிர்வாணமாக நிற்கிறார்கள்; சேலைகளைத் தூக்கிக்கொண்டு மரத்தின்மீது கிருஷ்ணன் இருக்கிறார் பாருங்கள் அந்தப் படத்தினை, நீதிபதி அவர்களே இதனை ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம் என்று சொன்னால், என்ன ஆவார் கிருஷ்ணன், அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்”. எப்படி முகலாய போலித்தன சரித்திரவியல், கட்டுக்கதை உருவாக்கம், சித்திரங்கள் வரந்த விதம்[4], இவர்களைப் போன்ற நாத்திகர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்[5].
ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகிய கீதையின் மறுபக்கம்: தன்னுடைய புத்தகத்தைப் பற்றி பீழ்த்திக் கொள்கிறார், “கீதையின் மறுபக்கம்! இதோ என் கைகளில் இருப்பது கீதையின் மறுபக்கம் நூல்!கிருஷ்ணன் உபதேசம் செய்தாராம் – யாருக்கு, அர்ஜுனனுக்கு! அதுதான் கீதை!எதிர் எதிரே படைகள் இருக்கு. அந்தப் படையில் அர்ஜுனன் சண்டை போட போகிறாராம். அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக கிருஷ் ணன் போறாராம். அப்போது காதோடு காதாக கீதா உபதேசம் செய்றாராம். எங்கே? எதிரிப் படைகள் நிற்கின்ற இடத்தில் – 700 சுலோகம் முடியும் வரை எதிரிப் படைகள் அமைதியாக நிற்கின்றதாம். கீதையின் மறுபக்கம் நூல் இருக்கிறதே, ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆங்கிலத்திலே, இந்தியிலே, எல்லா மொழிகளிலும் அச்சாகி இருக்கிறது. இதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது”. இக்காலத்தில் புத்தகத்தின் விற்பனையை எப்படி கணக்கில் காட்டுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். தமிழக வரலாற்றுப் பேரவையில் திக-புத்தகங்கள் இலவசமாக 300 பேராளர்களுக்குக் கொடுக்கப்பட்டன என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. ஆக டஜன் கணக்கில் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் நடத்தும் வீரமணிக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்பது என்பது என்ன முடியாத காரியமா? அதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது என்பதில்லை, அதாவது லட்சம் பிரதிகள் விற்று யாரிடம் போய் சேர்ந்தன என்று தெரியவில்லை. மேலும், அரைகுறையாக, அரைவேக்காட்டுத்தனமான, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும், இத்தகைய சித்தாந்திகளை மற்றவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, தங்களது நேரத்தை விரயமாக்க மாட்டார்கள் என்பதனையும் நோக்க வேண்டும்.
பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி: தஞ்சையில் திராவிட கழகம் சார்பில் இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த திராவிட கழகதலைவர் கி.வீரமணி நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது[6]: “பகவத் கீதை முழுமையான இந்து நூலாக கருதப்படுவதில்லை. இந்து மதம் என்பது பல பிரிவுகளை கொண்டது. அந்த வகையில் வைணவர்கள் தான் பகவத் கீதையை இந்து மதத்தை சார்ந்தது எனக் கூறுகின்றனர். சைவர்கள் பகவத் கீதையை ஏற்கமாட்டார்கள். அதேபோல மற்ற பிரிவுகளை சார்ந்தவர்களும் இதை ஏற்று கொள்வதில்லை. எனவே இந்து மதத்தை இந்நூல் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. ஆனால் மத்திய அரசு தேசிய புனித நூலாக பகவத் கீதையை திணிக்க முயற்சிக்கிறது. இந்தியை எப்படி அதிகாரம் படைத்த மொழியாக திணிக்கின்றனரோ அதேபோல சமஸ்கிருதத்தையும் திணிக்க ஆசைப்படுகின்றனர். அது போல இதையும் நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர். நம் நாட்டில் பல கலாசாரங்கள், பல்வேறு மதங்கள் பல மொழிகள் இருக்கின்றன. இந்த நாட்டின் என் மதம் மட்டும்தான் ஆள வேண்டும் எனச் சொல்லக் கூடிய பாசிச முறையிலான இந்த செயல்பாட்டை இந்தியாவே எதிர்க்கிறது”, இவ்வாறு அவர் கூறினார்[7]. பேட்டியின்போது தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரா. திருஞானம், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆகா, சைவர்கள் மீதுதான், வீரமணிக்கு எத்தனை பற்றுதல்! சிண்டு முடித்து விடுகிறார்கள். சோழன் குடுமி சும்மா ஆடாது என்றெல்லாம் இவர்கள் கிண்டல் செய்வார்களே, இப்பொழுது வீரமணி அதே வேலையைத்தான் செய்துள்ளார்.
© வேதபிரகாஷ்
20-09-2015
[1] திராவிடத்துவவாதிகளின் இரட்டைவேடங்கள் இனிமேலும் எடுபடாது. குடும்ப வாழ்க்கை-மேடை வாழ்க்கை என்று போலித்தனமாக வாழும் இவர்கள் இனி மற்றவர்களால் ஒதுக்கப்படுவார்கள். இருக்கும் கூட்டம் இன்னும் 50-100 ஆண்டுகள் வரை கத்திக் கொண்டிருக்கும்.
[2] 1969ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அத்திருமணபங்களை செல்லுபடியாக்கசுயமரியாதை திருமணம் சட்ட வடிவம் (28.11.1967) மசோதாவை அறிமுகப்படுத்தினர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[2] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்துமதத்தை ஆபாசமாக வர்ணித்த பகுத்தறிவு பகலவன் பாதையில் திருமணம் செய்து கொண்டவர்கள், திராவிடர்கள் “இந்துக்களாகி” தமது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்.
[3] வீரமணி, உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!, விடுதலை, 03-10-2013.
[4] https://indianhistoriography.wordpress.com/2015/06/25/pornography-like-works-written-during-mughal-period-involving-even-radha-krishna/
[5] https://indianhistoriography.wordpress.com/2015/06/26/indian-divine-symbols-figures-attacked-by-mohammedan-poets-sufis/
[6] மாலைமலர், பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 21, 5:01 PM IST.
[7] http://www.maalaimalar.com/2014/12/21170111/Vegetarians-will-accept-the-Bh.html