தஞ்சை பெரிய கோவிலில் புத்தர் விகாரம்!
http://www.viduthalai.periyar.org.in/20100821/snews04.html
குறிப்பு: புத்தர் சிலை கோவிலில் காணப்படுவது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இதற்கான விளக்கம், கீழ்கண்ட கட்டுரையிலேயே இருக்கிறது. இருப்பினும், தலைப்பு வேண்டுமென்றே விஷமத்தனமாக, “தஞ்சை பெரிய கோவிலில் புத்தர் விகாரம்”, என்று கொடுக்கப்பட்டுள்ளது!
மழை பெய்யும்போது, அழகுடன் நிலவொளி பொழியும்போது, நண்பகல் நேரத்தில், மாலை கதிரவன் மறையும் நேரத்தில் மின்னும் தங்கநிற ஒளியில் என்று தஞ்சை பெரிய கோயிலை நான் பல்வேறு நிலைகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இவை அனைத்திலும் காலை கதிரவன் எழும்போது காணும் காட்சியே மிகச் சிறப்பானதாக இருந்தது. சுற்றுச்சூழல் மகிழ்விக்கும் வண்ணம் இருக்கும் இக்காலை நேரமே பிரகாரத்தைச் சுற்றிவர ஏற்றது.
சிலமாதங்களுக்கு முன் ஒருநாள் அதிகாலை நேரத்தில் நான் சென்றிருந்த போது திருச்சுற்று மாளிகை என்ற கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருந்த சுற்றுப் பாதையில் இருந்த அடித்தளங்கள், தூண்களில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு எழுத்துக்களின் மேல் சாய்வான கதிரவனொளிக் கற்றைகள் படிவதைக் கண்டேன். கருப்பு வண்ணத்தில் அழகுறச் செதுக்கப்பட்டது போன்று அந்த எழுத்துக்கள் தோன்றின. முருகன் சன்னிதி படிகளில் அமர்ந்து வழக்கம்போல ஓதுவார் ஒருவர் தேவாரப் பாடல் பாடிக்கொண்டிருந்தார். பிரகாரத்தில் எதிரொலித்த அவரது குரல் தொலைவில் கூவிக்கொண்டிருந்த குயிலின் ஓசையுடன் கலந்து ஒலிக்கையில் கம்பீரமாக நிற்கும் இந்த மாபெரும் கோயிலைப் பற்றிய பல கேள்விகள் மனதில் தோன்றின.
இக்கோயில் முழுவதுமாக ஏன் கட்டி முடிக்கப்படவில்லை?
இக்கோயில் கட்டப்பட்ட பல நூற்றாண்டு கழிந்த பின் வந்த நாயக்கர்கள் கருவறைக்கு முன் உள்ள பெரிய மண்டபத்தைக் கட்டி முடித்தனர். இம்மண்டபத்தின் தூண்களில் 108 பரதநாட்டியச் சிற்பங்கள் உள்ளன. ஆனால் 20 தூண்களில் மட்டும் எந்தவிதமான சிற்பங்களும் செதுக்கப்படாமல் நிற்கின்றன. வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென நிறுத்தப்பட்டும் இருக்கக்கூடும். இவ்வாறு கட்டி முடிக்கப்படாத கோயிலுக்கு ஏன் குடமுழுக்கு செய்யப்பட்டது? இராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் தனது தலைநகரை தஞ்சையில் இருந்து ஏன் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றிக் கொண்டான்? தனது தந்தை கட்டத் தொடங்கிய தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி முடிப்பதை விட்டுவிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றொரு கோயில் அவன் ஏன் கட்டத் தொடங்கினான்? சைவக் கோயிலில் காணப்படும் புத்தரின் சிலைகள் எவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை?
தஞ்சை பெரிய கோயிலுக்கு வழக்கம்போல நான் சென்று கொண்டிருந்த காலத்தில் அங்கிருந்த புத்தர் சிற்பம் காணப்படும் மாடத்தை எனது கவனத்துக்கு முதன் முதலாகக் கொண்டு வந்தவர் அமெரிக்க டேவிட்சன் கல்லூரியில் ஆசிய கலை, வரலாற்றுப் பேராசிரியராக இருந்த எனது நண்பர் முனைவர் ஜபாப் தாமஸ்தான். சாக்யமுனி புத்தரின் சிற்பம் உள்ள மாடங்கள் இரண்டு இந்தக் கோயிலில் உள்ளன. ஒன்று இரண்டாவது கோபுரத்தின் அடிப்பகுதியில் உள்ளது; மற்றொன்று பிரதானக் கோயிலுக்குள் உள்ளது. இதில் சில நிகழ்வுகள் தொடர் சிற்பக் சங்கிலி மூலமாக ஏதோ கோமாளித்தனமான பாணியில் தெரிவிக்கப்படுபவையாக உள்ளன. மத்திய கால தமிழகத்தின் கோயில்களில் இவ்வாறு சிற்பங்களை அமைப்பது ஒரு பாணியாகவே இருந்தது. கதை சொல்லும் இது போன்ற சிறுசிறு சிற்பச் சங்கிலிக் காட்சிகளை வேறு சில கோயில்களிலும் நீங்கள் காணலாம். அது இதிகாசங்களில் வரும் ஒரு காட்சியாகவோ அல்லது ஒருவரலாற்று நிகழ்வாகவோ இருக்கலாம். இதனைப் போலத்தான் பல்லவர்களின் வரலாறு காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயிலில் சிற்பச் சங்கிலிகளில் கூறப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் பகீரதனின் கதை இவ்வாறு சிற்பத்தில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை பெரியகோயிலின் இரண்டாவது கோபுர நுழைவாயிலின் அடித்தளத்தில் முதல் புத்தர் சிற்ப மாடம் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கம் திரும்புங்கள். மேற்கு நோக்கியிருக்கும் இந்த சிற்ப மாடம் உங்கள் கண்களுக்கு நேராகத் தெரியும். இங்கே இரண்டு சிற்பங்கள் உள்ளன. ஒரு மரத்தின் கீழ் புத்தர் உட்கார்ந்திருப்பது போன்றது ஒன்று. அந்த மரத்தின் அடிப்பாகத்தை ஒரு மனிதன் பிடித்துக் கொண்டிருப்பான். மற்றொரு சிற்பத்தில் ஒரு இணையர் (கணவன்_மனைவி) இறைஞ்சும் நிலையில் காணப்படுவர்; கணவன் தலையில் ஒரு லிங்கம் இருக்கும்.
பிரதானக் கோயில் கட்டமைப்பில் புத்தரின் இரண்டாவது சிற்பம் காணப்படுகிறது. கருவறைக்குச் செல்லும் படிகளின் தென்புறத்தில் உள்ள அலங்காரக் கைப்பிடிச் சுவர் மீது இது உள்ளது. இத்தொகுப்பில் மூன்று சிற்பங்கள் உள்ளன. முதல் சிற்பத்தில் புத்தர் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்திருக்கிறார். மேல்புறத்தில் கந்தர்வர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது சிற்பத்தில் ஒரு மரத்தின் கீழ் புத்தர் நின்றிருக்கிறார். அவரை அரசகுடும்பத்தினர் வணங்கி நிற்கின்றனர். அவர்களுக்குப் பின் வணங்கி நிற்கும் நிலையில் கந்தர்வர்கள் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது சிற்பத்தில் வானத்திலிருந்து வரவேற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முன் உள்ள கந்தர்வன் ஒருவன் தன் தலைமீது லிங்கம் சுமந்து நிற்கிறான். உள் பிரகாரத்தின் வடக்குச் சுவர் சித்திரங்களில் விவரிக்கப்பட் டுள்ள கதைதான் இங்கும் விவரிக் கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக் கப்பட்டது. ஆனால், இவற்றை ஒப்பிட்டுப் பார்க்க என்னால் அந்த ஓவியங்களைப் பார்க்க இயலவில்லை.
இக்கோயில் பற்றி எழுதப்பட்டுள்ள எண்ணற்ற நூல்களில் எது ஒன்றிலும் இந்த புத்தர் சிற்பம் உள்ள மாடங்களைப் பற்றிய குறிப்பு எதுவுமே இல்லை. தென்னிந்தியக் கலை வரலாற்று ஆசிரியரான சிவராமமூர்த்தி என்பவர் எழுதிய அதிகாரபூர்வமான இந்திய தொல்பொருள் ஆய்வு அறிக்கையிலும் இது பற்றிய குறிப்பு ஏதுமில்லை. இது பற்றி பல இலக்கியங்களில் நான் தேடிப்பார்த்தபோது, ஒரே ஒரு பண்டிதர் மட்டுமே இந்தச் சிற்பங்களைப் பற்றி பதிவு செய்திருப்பதுடன், அவற்றைப் புரிந்து கொள்ளவும் முயன்றிருப்பதைக் கண்டேன். 1976ஆம் ஆண்டு கோயில் சட்டம் பற்றிய ஆய்வின் முன்னுரையில் முனைவர் சுரேஷ் பிள்ளை இந்த புத்தர் சிற்ப மாடங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சோழ மன்னர்கள் காலத்தில் கடற்கரைப் பகுதியில் புத்த மதமும் டெல்டா பகுதியில் ஜைன மதமும் பரவலாகப் பின்பற்றி வரப்பட்டன என்று அவர் குறிப்பிடுகிறார். ஒரே குழுவைச் சேர்ந்த கட்டடக் கலைஞர்கள் ஒரு கோயிலையோ, புத்த விகாரத்தையோ, ஜைனமடத்தையோ கட்டுவதில் ஈடுபட்டிருப்பார்கள். இத்தகைய இடங்களில் இந்த கட்டடக் கலைஞர்கள் சுதந்திரமாக நடமாடுவர்.
தஞ்சை பெரியகோயிலில் புத்தரைப் பற்றிய மற்றொரு சிற்பமும் உள்ளது. கருவறையைச் சுற்றிவரும் பாதையில் இரண்டு நிலைகளில் சுவர்களில் ஈரக் காறையில் வரையப்பட்ட சோழர்களின் வடிவங்கள் உள்ளன. அனைத்துக்கும் மேலே தவ நிலையில் உட்கார்ந்திருக்கும் ஒரு மீட்டர் நிளமுள்ள புத்தரின் ஓவியம் உள்ளது. இந்தச் சிற்பங்கள் எல்லாம் நமக்கு என்ன தெரிவிக்கின்றன? இதில் உள்ள கதை என்ன? கோயிலின் ஒரு பகுதியாக இவற்றை வைத்திருப்பதன் முக்கியத்துவம் என்ன? இக்கோயிலைப் பற்றி விடைகாண இயலாத கேள்விகள் மேலும் பல உள்ளன. கஜுரஹோ கோயிலின் ரகசியங்களைக் கண்டுபிடித்து தெரிவித்த சோபிதர் பூஞ்சா போன்ற கற்றறிந்த பண்டிதர் எவரேனும் வந்து இவற்றுக்கு விடை கண்டால்தான் உண்டு.