Archive for the ‘ரோடு போடுதல்’ Category

செம்மொழி மாநாடு நிதியில் ‘கை வைக்க’ திட்டம் :உஷாராகுமா, தமிழக அரசு?

ஜனவரி 20, 2010
செம்மொழி மாநாடு நிதியில் ‘கை வைக்க’ திட்டம் :உஷாராகுமா, தமிழக அரசு?
ஜனவரி 20,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6338

Front page news and headlines today
300 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணிகள்: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, கோவையில் 300 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவசர கதியில் அமல்படுத்தப்படும் பணிகளில் “கமிஷன் ஆதாயம்’ தேட, சில அரசுத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் ஜூனில் நடக்கிறது. இதையொட்டி, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மின் வாரியம் உள்பட பல்வேறு அரசு துறைகளிடம் தனித்தனியாக மேம்பாட்டு திட்ட மதிப்பீடுகள் பெறப்பட்டு, அதற்கான ஒப்புதல் மற்றும் நிதியை தமிழக அரசு வழங்கி வருகிறது; சில பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

பூங்கா சீரமைப்பு: செம்மொழி மாநாடு முன்னிட்டு, மாநகராட்சி வ.உ.சி., பூங்கா உள்பட 47 பூங்காக்களை மேம்படுத்தவுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்ட”ரிசர்வ் சைட்’ களிலும் பூங்கா அமைக்கப்படும், என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவியது.ஆனால், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ள பட்டியலில், ஏற்கனவே இருக்கும் சாலையோர பூங்காக்கள் மற்றும் பராமரிப்பில் இல்லாத பூங்காக்களை சேர்த்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஒவ்வொரு பூங்கா சீரமைப்பு பணிக்கும் 30 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தொகைக்கு, என்னமாதிரியான பணிகளை செய்து பூங்காவை மேம்படுத்தப்போகிறார்கள் என்பது, மாநகராட்சி நிர்வாகத்துக்கே வெளிச்சம்.

மதிப்பீடு உயர்த்தமடும் மர்மம்: மாநாட்டையொட்டி அவசர நிலையை புரிந்து கொண்டு, ஒன்றுக்கு மூன்று மடங்காக மதிப்பீட்டை உயர்த்தி, நிதி பெற்றிருப்பதாகவும் சந்தேகம் வலுக்கிறது. இதற்கேற்ப, ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள பல ரோடுகளை மேம்படுத்த, பல லட்சம் ரூபாயை கடந்து கோடி ரூபாய் அளவுகளில் மதிப்பீடுகள் தரப்பட்டுள்ளன. “எவ்வளவுக்கு மதிப்பீடுகளை போட்டாலும், “மாநாட்டுப் பணி’ என்பதற்காக, எதையும் கேட்காமல் அரசு நிதியளிக்கும்’ என்ற நம்பிக்கை ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் மாநில நெடுஞ்சாலைத்துறை பணிகளில் “கமிஷன்’ பல மடங்கு அதிகரித்து விட்டதாகவும், இதற்கேற்ப திட்ட மதிப்பீடுகள் தாறுமாறாக அதிகரிக்கப்பட்டுள்ளதாவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிலைமை இவ்வாறு இருக்க, செம்மொழி மாநாட்டையொட்டிய நகரின் மேம்பாட்டு பணிகளிலும் மதிப்பீடுகள் எகிறுவதாக கூறப்படுகிறது.மாநாட்டுக்கு முன் மிக குறுகிய காலத்தில் மேம்பாட்டு பணிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் “கான்ட்ராக்டர்கள் பணி செய்ய முன் வர மாட்டார்கள்’ என, அரசுத் துறை அதிகாரிகள் சிலர், அரசுக்கு தவறான தகவல் அளித்து, “ஆதாய’ முயற்சிக்கு பலன் தேட முயற்சிப்பதாக கூறப்படுகிறது.இதன் அடிப்படையில், மேம்பாட்டு திட்ட பணிகளுக்கான மதிப்பீட்டை உயர்த்தி, கமிஷன் அள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமிஷன் கைமாறும் திட்டம்: கோவை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை உட்பட முக்கியத்துறைகளில், இந்த மாநாட்டு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பலரும், இதே நகரில் பல ஆண்டுகளாக இருந்து, அந்தந்த துறை “கான்ட்ராக்டர்களுடன்’ மிகுந்த நெருக்கம் கொண்டிருப்பவர்கள்.தவிர, செம்மொழி மாநாடு குழுக்களில் இடம் பெற்றுள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் பலரும், மேம்பாட்டு பணிகளில் தங்களுக்குரிய “பங்கை’ எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால், 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை கமிஷனாக கைமாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.இதனால், பணிகளின் தரம் எப்படியிருக்குமோ, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரையிலும், ஆய்வு, ஆய்வுக் கூட்டம் நடத்துவதிலேயே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் காலத்தை கடத்தி வருகின்றனர். பணி துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மாநகர மேம்பாட்டு பணிகளுக்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை, ஒப்புதல், நிதி ஒதுக்கீடு, அரசாணை, டெண்டர் என பல நடைமுறைகளை கடந்து பணிகள் எந்த மாதத்தில் துவங்கும், என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. பணிகள் தாமதமாக துவங்கி, அவசர கதியில் அந்த வேலை நடக்கும்போது, தரமிருக்குமா, என்பதும் சந்தேகமே. கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டால் தமிழுக்கும், கோவைக்கும் வளர்ச்சி கிடைக்கிறதோ, இல்லையோ, அரசியல் வாதிகள், அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்கள் கூட்டணி “வளமாகி’ விடும் என்பது நிஜம்.

பரிசா? தண்டனையா?கோவை மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்தபணிகளிலும் கூடுதல் “பொறுப்பு’ வகிக்கும் சில அதிகாரிகள் சம்பாதித்து சொத்து சேர்த்துள்ளனர். இவர்களில், முதல் தர வரிசையில் உள்ள இரு அதிகாரிகளை தேர்வு செய்து, அவர்கள் வகித்திருந்த “பொறுப்பு’ பதவிகளில் இருந்து கழற்றிவிடப்பட்டு, மாநாட்டு பணி அதிகாரிகளாக நியமித்துள்ளது, மாநகராட்சி நிர்வாகம். இவர்கள்தான் 113 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை “திறம்பட’ செய்து முடிக்கப்போகின்றனராம். இது, இவர்களுக்கு கிடைத்த தண்டனையா அல்லது பரிசா என்பது மாநகராட்சி நிர்வாகத்துக்கே வெளிச்சம்.