சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “………………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்!
பெரியார்தாசன் என்கின்ற அப்துல்லா காலமானார்: பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார். ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். பெரியார்தாசன் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கல்லீரல் கோளாறு காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது[1]. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும், வளவன் (35), சுரதா (35) என்ற 2 மகன்களும் உள்ளனர்[2].
அவருடையஆன்மாசாந்தியடையபிரார்த்தனை: “அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை” என்று செய்யலாமா, கூடாதா என்று தெரியவில்லை. இருப்பினும், இந்தியப் பாரம்பரியப்படி, “அவருடைய ஆன்மா சாந்தியடையடைவதாக” என்று சொல்லிக் கொண்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். இணைதளங்களில் தேடியபோது, நக்கீரனில் வெளிவந்த கீழ்கண்ட செய்தி கண்களில் பட்டது. அது அப்படியே கொடுக்கப்படுகிறது. கதிரவன் என்பவர் அச்செய்தியைக் கொடுத்திருக்கிறார்.
என்னநடந்ததுஇவர்கள் (பெரியார்தாசன்மற்றும்மணிவண்ணன்) வாழ்க்கையில்?: அவ்வப்போது சினிமாவில் நடித்து வந்த பெரியார்தாசன் அண்மையில் (2010) ஆத்திகரானார். அதுமட்டுமில்ல – இஸ்லாம் மதத்திற்கு மாறினார் (11-03-2010). இவர் மாதிரியே பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன். இவர் இப்போது சாய்பாபா பக்கம் சாய்ந்திருக்கிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ இயல்[3] பேராசிரியராக பணிபுரிந்த பெரியார்தாசனை பாரதிராஜா சினிமாவுக்கு கொண்டு வந்தார். நடிப்போடு ரியல் எஸ்டேட், மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிலும் கால் பதித்தார். கடந்த 2004ம் ஆண்டு அன்பு பாலா நடித்த அம்மா, அப்பா, செல்லம் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. இதற்காக சென்னையில் இருந்து நான், (பேட்டி எடுக்க) பெரியார்தாசன், நடிகை சபீதா ஆனந்த் (நடிக்க) மூவரும் ஒரு காரில் புதுச்சேரி சென்றோம். அப்போது பெரியார்தாசன், தனது மகன் வ.சி.வளவன் திருமணம் அழைப்பிதழ் கொடுத்தார். அது ஒரு புத்தகமாகவே இருந்தது. அந்த திருமண அழைப்பிதழில் பெரியாரின் படம் அச்சிடப்பட்டிருந்தது. உள்ளே திருக்குறள் இன்பத்து பாலுக்கு பெரியார்தாசன் எழுதிய விளக்கவுரை.
ஏன்பெரியாரின்படத்தைதிருமணஅழைப்பிதழில்அச்சிட்டுள்ளேன்: ஏன் பெரியாரின் படத்தை திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளேன் என்று நினைப்பீர்கள்? என்று அவராகவே கேட்டு அவராக விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார். சேசாசலம் என்கிற என் பெயரையே பெரியார்தாசன்னு மாத்திக்கிட்டேன்னா பார்த்துக்குங்க…….என்று பெரியார் மீது தான் கொண்ட பற்று பற்றி, கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் ஆரம்பித்து மரக்காணம் வரை சொல்லிக்கொண்டு வந்தார். நொங்கு கடை, இளநீர் கடைகளில் கார் நின்ற போது மட்டும் இடைவேளை. ஐந்து வருடங்களில் (2005-2010) அவர் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ….தற்போது இறைவன் மீது நாட்டம் கொண்டிருக்கிறார். இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதே போல் பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன். இதனால்தான் இவருக்கும் நடிகர் சத்யராஜூக்கும் நெருக்கம் அதிகமானது. இவர் இப்போது பெரியார் தொண்டர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[4]. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அளவிற்கு என்ன நடந்தது இவர்கள் வாழ்க்கையில்?
2013ல்பெரியார்தாசன், மணிமண்ணன்காலமானது: ஜூன் 2013ல் தான் நாத்திகரான மணிவண்ணன் (31-07-1954 – 15-06-2013) காலமானார். கதிரவன் நக்கிரனில் எடுத்துக் காட்டியுள்ளபடி, மணிவண்ணன் “கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[5]” என்றிருந்தால், இந்த மூன்று ஆண்டுகளில் மணிவண்ணன் ஆதிகரானாரா, கடவுளை நம்ப ஆரம்பித்தாரா, என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால், அவரது நண்பர் இந்த மூன்று ஆண்டுகளாக முஸ்லிமாக இருந்திருக்கிறார். (பகுத்தறிவு, நாத்திகம் இவற்றையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, பெரியாரையும் ஒதுக்கி விட்டு) கடவுளை நம்பியிருக்கிறார். திராவிடர்களுக்குக் குழப்பமாகத்தான் இருக்கும். ஊடகங்களும்[6] “பெரியார்தாசன் மரணம்” என்றுதான்[7] செய்திகளை[8] வெளியிட்டிருக்கிறார்கள்[9].
இதயத்தில்விழுந்தஇடி – பெரியார்தாசன்மறைவுக்குவைகோஇரங்கல்: இதயத்தில் விழுந்த இடி என்று பேராசிரியர் பெரியார்தாசன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்[10]. அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியக் கருவூலமான, என் ஆருயிர்ச் சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், என்னையும், இயக்கத்தோழர்களையும் கண்ணீரில் துடிக்க வைத்து மறைந்து விட்டார். தந்தை பெரியாரை, மாணவப் பருவத்தில் தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமரியாதை வீரராக, பகுத்தறிவு நெறியை மக்களிடம் பரப்ப, எழுத்தாலும், பேச்சாலும் அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை.
பொருளியல், தத்துவஇயல், உளவியல்பயின்றது: பச்சையப்பன் கல்லூரியில், பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முதுகலை பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராகப் பணி ஆற்றி, 34 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில், மெய்ப்பொருள் இயல் பேராசிரியராகப் பணி ஆற்றினார். அண்ணல் டாக்டர் அம்பேத்கருடைய, அனைத்து நூல்களையும் பழுதறக் கற்று, ஆய்ந்து அறிந்து, அதில் அவர் பெற்ற பாண்டித்யத்துக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது. அதைப்போலவே, தந்தை பெரியாரின் எழுத்துகளையும், உரைகளையும், முழுமையாகக் கற்று உணர்ந்தவர்; அறிவாசானின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்று, திராவிடர் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இயங்கியவர்.
தமிழ்ஈழவிடுதலை, பௌத்தம், பாலிமொழிகற்றல்முதலியன: தமிழ் ஈழ விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். மூன்று தமிழர்களின் உயிர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க, நான் போராடிய காலத்தில், தாமாக முன்வந்து, தன்னை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கழகத்தை மக்கள் மன்றத்தில் வலுப்படுத்திட, மேடை முழக்கத்தின் மூலமாக, அவர் ஆற்றி உள்ள பணிகள் அளப்பரியதாகும். புத்தரின் போதனைகளைப் பயில்வதற்காக, இலங்கைக்குச் சென்று, பாலி மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 56 நூல்களைத் தந்து உள்ள பெரியார்தாசன், அம்பேத்கர் தொகுத்த புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை, தமிழில் மொழி ஆக்கம் செய்தார். அந்தநூல், தைவான் நாட்டில் மூன்று இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு, உலகெங்கும் பரப்பப்பட்டன.
உடலைஎரியூட்டவும்வேண்டாம்; புதைக்கவும்வேண்டாம்: அவர் உடல் நலம் குன்றியபோது, ஜூலைத் திங்களில் அவரது இல்லம் சென்று சந்தித்து, பல மணி நேரம் உரையாடிக் கொண்டு இருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 16 ஆம் நாள், குளோபல் மருத்துவமனையில் அவரைச் சந்தித்தேன். மூன்று மணி நேரம் அவர் என்னிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தார். அதுதான், அவர் கடைசியாகப் பேசியது என்று, அவரது பிள்ளைகள், நேற்று என்னிடம் தெரிவித்தனர். பேரறிஞர் அண்ணாவைக் கொத்திச் சென்ற புற்று நோய்தான், பெரியார்தாசனையும் நம்மிடம் இருந்து பறித்து விட்டது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதற்கு ஏற்ப, அவ்விதமே அவரது உடல், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இனத்துக்கும் அருந்தொண்டு ஆற்ற இருந்த, எங்கள் கொள்கை வைரத்தை, சாவு கொடூரமாகக் கொண்டு போய் விட்டதே என்ற வேதனையில் தவிக்கிறேன். அவரை இழந்து ஆற்றொணாத் துயரத்தில் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்க்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்[11].
வாழ்க்கைக்குறிப்பு: சேசாசலம் 1950ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள அகரம் என்ற கிராமத்தில், சைவவேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சேசாசல முதலியாராக, இந்துமத நம்பிக்கையாளராக இருந்தார். 1980ல் பெரியாரின் தொடர்பினால், “பெரியார்தாசன்” ஆனார். திராவிட சித்தாந்தத்தில் ஊறியிருந்தாலும், பல நம்பிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்ததால், சில காலத்திற்கு கிருத்துவராகக் கூட இருந்தார் என்று சொல்லப்படுறது. பிறகு பௌத்தராகி, “சித்தார்த்” என்ற பெயரை வைத்திருந்தார். 2010ல் முஸ்லிம் ஆனார்.
காலம் | பெயர் | மதம் / நம்பிக்கை |
c.1950-70 | சேசாசல முதலியார் | சைவம்/ இந்து |
c.1970-80 | சேசாசலம் | பகுத்தறிவுவாதி |
c.1980-2008 | பெரியார்தாசன் | நாத்திகம் / இந்துவிரோதம் |
c.2008-10 | சித்தார்த் | பௌத்தம் / இந்துவிரோதம் |
c.2010-13 | அப்துல்லா | இஸ்லாம் / கடவுள்-மதம் நம்பிக்கையாளர் |
C = circa = approximately = நம்பிக்கை, மதநம்பிக்கை, கடவுள் நம்பிக்கையைப் பொறுத்த வரையிலும் நிலைமை மாறியுள்ளதால், இப்படி குறிப்பிடப் பட்டுள்ளது.
யார் மறைந்தது, எது கடந்தது, எது நின்றது?: சித்தாந்த கலவைகளினால், குழப்பங்களினால், நம்பிக்கைச் சிதறல்கள், மோதல்கள் இவற்றினால் உருவானவ போலிருந்தார் என்று அவரது வாழ்க்கைக் குறிப்புகள் காட்டுகிறது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதிலிருந்து அத்தகைய போராட்டங்கள் வெளிப்படுகின்றன. 11-03-2010 முதல் 18/19-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா இறந்தால், யார் இறந்தது என்று உலகம் சொல்லும்?
- இந்துவாக இருந்த சேஷாசல முதலியார் இறந்தாரா?
- நாத்திகன் சேஷாசலம்இறந்தாரா?
- பெரியார்தாசன் இறந்தாரா?
- “……….” –இறந்தாரா?
- சித்தார்த்தா என்ற பௌத்தர் –இறந்தாரா?
- அப்துல்லாஹ் என்ற முஸ்லிம் இறந்தாரா?
இந்தியன் இந்தியனாக இருந்தாலே போதும் – மதம் மாறவேண்டிய அவசியம் இல்லை.
© வேதபிரகாஷ்
19-08-2013
[3] சைக்காலாஜி / மனோதத்துவம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
[4] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள் வாழ்க்கையில்?, நக்கீரன், http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360
[5] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள் வாழ்க்கையில்?, நக்கீரன், http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360
[8]http://dinamani.com/latest_news/2013/08/19/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86/article1741793.ece
[10] தினமணி, 19-08-2013