திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும்,அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்
சுயமரியாதை திருமணம்
எம்.ஜி.ஆரும், நானும் பிரியக்கூடாது என பாடுபட்டவர் : ஆர்.எம்.வீரப்பனுக்கு கருணாநிதி புகழாரம்

விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: எனக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் உள்ள தொடர்பு நீண்ட காலத் தொடர்பு, மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆருடைய அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக, அன்பு நண்பர்களில் ஒருவராக, அவசியப்பட்ட ஆலோசகர்களிலே ஒருவராக விளங்கியவர் வீரப்பன். “குடியரசு’ அலுவலகத்தில் 1945ம் ஆண்டு துணை ஆசிரியராக நான் இருந்த காலம் தொட்டு எனக்கும், இவருக்கும் நெருக்கமான நட்பு, அரும்பி மலர்ந்து இன்றைக்கும் மணம் வீசுகிற வகையில், அவரது இல்ல மண விழாவை நான் நடத்தி வைக்கவும், அவர் வரவேற்கவுமான சூழல் உருவாகியிருக்கிறது.
இந்த மேடையில் எனக்கு முன் பேசியவர்கள், எங்களுக்குள் என்றும் பிணக்கு ஏற்பட்டதில்லை என்று இங்கே சொன்னார்கள். இவர் என்னை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட அந்தக் காலத்தில் கூட என்னிடம், “கள்ளக் காதல்’ கொண்டவர். தி.மு.க.,வுக்கும், எம்.ஜி.ஆர்., தலைமையில் இயங்கிய அ.தி.மு.க.,வுக்கும் இடையே சில பிரச்னைகள் தோன்றும் போதெல்லாம், இவரிடமிருந்து எனக்கு ஒரு ரகசிய கடிதம் வரும். எனக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே ஒரு பிரிவு ஏற்படக்கூடிய ஒரு சூழல் 1971ம் ஆண்டில் ஏற்பட்ட போது, வீரப்பன் என் இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக, “அந்தச் சூழ்நிலை உருவாகக்கூடாது; நீங்கள் இருவரும் பிரிந்து விடக்கூடாது; ஒன்றாக இருந்து தான் இயங்க வேண்டும். பிரிக்கிற சில பேர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒன்றுபட்டு பணியாற்றுங்கள்’ என்று கண்ணீர் கலந்து தன் கவலையைத் தெரிவித்தவர்களில் மிக முக்கியமானவர். பல நேரங்களில் எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் அல்லது தி.மு.க.,விற்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன். வீரப்பன் என் நீண்ட கால நண்பர் என்பதால் அவருக்கு அந்தக் கவலை இருந்தது.
மேடையில் திருநாவுக்கரசு பேசும் போது, “ஆர்.எம்.வீரப்பனுக்கு எம்.எல்.சி., பதவி கொடுங்கள்’ என்று சொன்னார். பதவிகளை பல பேருக்கு கொடுக்கிற இடத்தில் இருந்தவர் வீரப்பன். அவர் பதவிகளை பகிர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியவரே தவிர, கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டியவர் அல்ல. அந்தளவிற்கு இந்த இயக்கத்தின் ஆணிவேராக, அடிவேராக, இயக்கத்தை வளர்க்கின்ற வலுவான விழுதுகளிலே ஒருவராக அன்றைக்கும் இருந்தார்; இன்றைக்கும் இருக்கிறார். இவரை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.
நாள் முழுவதும் அளப்பரிய பணிகள், அதற்கிடையே கோவைக்கு மாநாட்டு பணிகளைப் பற்றி ஆய்வு செய்யச் செல்கிறோம். அங்கிருந்து ஊட்டிக்குச் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால், அங்கு சென்ற எனக்கு இந்த நினைவு வந்தது. நினைவு சாட்டையாக விழுந்தது. “வீரப்பன் இல்லத் திருமணத்திற்கு செல்லாமல் ஓய்வு ஒரு கேடா உனக்கு’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இங்கே வந்துள்ளேன் என்றால், அது நட்பின் ஆழத்தை, நட்பின் உயர்வை உணர்த்தக்கூடிய ஒன்று என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, அத்தகைய ஒரு உத்தம நண்பர் என்றைக்கும் இந்த இயக்கத்தின் தூணாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவரது இல்லத் திருமணத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
விழாவில், நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்.எம்.வீரப்பன் அனைவரையும் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.