பத்ரி சேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிதற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது! (2)

பிராமணர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள்[1]: நாராயணன் திருப்பதி பேசியது, “பிராமணர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள் பத்ரி சேஷாத்ரி என்ற தனிநபரை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளட்டும், ஆனால், இது போன்று தனிநபர் தொடர்புடைய விவகாரங்களில் வேறு எந்த சமூகத்தையாவது ஒட்டுமொத்தமாக இழித்தும், பழித்தும் பேசுவதற்கு சுப.வீரபாண்டியன் போன்ற ‘கோழைகளுக்கு‘ தைரியம் உள்ளதா? பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இது போன்ற வன்மம் மிகுந்த தரக்குறைவான, மலிவான சாதிய விமர்சனங்களை இந்த ‘கோழைகள்‘ முன்வைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது”.

வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவாரா?: நாராயணன் திருப்பதி பேசியது, “ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? பத்ரி சேஷாதிரி தவறு செய்திருந்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் மீது நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு சாதியை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள, மிரட்டியுள்ள சுப. வீரபாண்டியன் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை, இது அனைவருக்குமான ஆட்சி என்று பெருமிதம் கொள்கிற முதலமைச்சர், அதன்படி நடந்து கொள்வாரா? நேர்மையான ஆட்சி நடக்குமா? மத துவேஷங்களை செய்பவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என சட்டசபையில் உறுதி கொடுத்த முதலமைச்சர் ஒரு குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து, மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவாரா? நேர்மையான ஆட்சி நடத்துவதாக சொல்லிக்கொள்வதை உறுதி செய்வாரா? நியாயமாக நடந்து கொள்வாரா?,” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: இது குறித்து, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது[2]: “ஒருவரை அரசின் குழுவில் சேர்க்கவோ, குழுவில் இருந்து விலக்குவதற்கோ அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், பத்ரி சேஷாத்திரியை அரசின் இணைய கல்வி ஆலோசனை குழுவில் இருந்து நீக்கிய விதம் தவறானது.எந்த தலைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர் தான். தலைவர்களை நியாயமாக, கண்ணியமாக விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. அண்ணாதுரையை பத்ரி விமர்சித்த விதம் தவறு என்றால், அதை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை உண்டு. அதை தவறு என சொல்ல முடியாது. அதற்காக நாகரிக குறைவாகவோ, மிரட்டும் வகையிலோ பேசுவதை ஏற்க முடியாது. விமர்சனத்துக்காக ஒருவரை அரசு குழுவில் இருந்து வெளியேற்றினால், இப்படிப்பட்ட குழுக்களில் இருக்கும் மற்றவர்கள், எந்த தலைவர் குறித்தும் இதுவரை விமர்சித்தது இல்லையா. பத்ரி சேஷாத்ரி, அண்ணாதுரையை விமர்சித்து விட்டார் என்றதும், தி.மு.க.,வின் ஆதரவு இயக்க தலைவர்கள் துள்ளி குதித்து வருகின்றனர். தி.மு.க., எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இப்படிப்பட்ட அநாகரிக சூழல் உருவாவது, வாடிக்கையாகி இருக்கிறது.தி.மு.க., தலைவரோ, இரண்டாம் நிலை தலைவர்கள் கூட, இப்படிப்பட்ட அநாகரிக விமர்சனங்களை வைப்பதாக தெரியவில்லை. ஆனால், தி.மு.க., ஆதரவு இயக்கங்கள் என்று கூறும் இயக்கங்களின் தலைவர்கள் தான் அராஜகமாக பேசுவதும், அநாகரிகமாக நடந்து கொள்வதும் நடக்கிறது. பிராமணர்களுக்கு எதிராக முதலில் பூணுால் அறுப்பு போராட்டம் நடத்திய தி.க., இயக்கம் தி.மு.க.,வுக்கு ஆதரவு நிலை எடுத்து செயல்படுவதாலேயே, அவர்களுக்கு இத்தனை தைரியம்.”

ஒரு ஜாதியினரை மட்டும் அவமதிப்பதும், கேவலமாக நடத்துவதும் எப்படி சமூக நீதியாகும்?:வானதி சீனிவாசன் பேசியது, “தி.மு.க.,வினருக்கு இரு வண்ண பட்டை எப்படி அடையாளமாக இருக்கிறதோ, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. சிலர் திருநீறு பூசுகின்றனர்; சிலர் திருமண் பூசுகின்றனர். அதைப்போல பிராமணர்கள் தங்கள் அடையாளமாக பூணுால் அணிகின்றனர். பிராமணர்களுக்கு எதிரான பிரச்னை என்றால், உடனே அவர்களின் பூணுாலை அறுப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயம்? அனைத்து ஜாதியினரையும், மதத்தவரையும் சமமாக மதித்து நடப்பது தானே சமூக நீதி? அதை விடுத்து, ஒரு ஜாதியினரை மட்டும் அவமதிப்பதும், கேவலமாக நடத்துவதும் எப்படி சமூக நீதியாகும்? தி.மு.க., ஆட்சிக்கு வந்து விட்டாலே கூடவே ரவுடித்தனமும் வந்து விடும் என்பதற்கு சுப.வீ., போன்றவர்கள் பேச்சும் உதாரணம். இப்படி முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை என்று சொன்னாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்க, அவர் அனுமதிப்பதே தவறு தானே. அவருக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால், இவர்களை கட்டுப்படுத்தாது ஏன்?”

திராவிட குடும்பத்தவர் பிராமணர் உதவி பெறுவது: வானதி சீனிவாசன் பேசியது, “பூணுால் போட்டிருக்கும் ஆட்கள் வேண்டாம் என்று சொன்னால், தி.மு.க., தலைவரோ, அக்கட்சியின் மற்ற தலைவர்களோ தங்களுக்கு மருத்துவம் பார்த்து கொள்ளவோ, ‘ஆடிட்டிங்‘ பணிக்கோ, சட்ட ரீதியிலான பணிக்காகவோ, பிராமணர்களிடம் செல்வதே இல்லையா? ஏன் தி.மு.க., தலைவர் வீட்டுப் பெண்கள், கோவில் கோவிலாகச் செல்லும்போது, பூணுால் அணிந்த பிராமண அர்ச்சகர்களிடம் பிரசாதம் வாங்க மறுத்து விடுகின்றனரா? தங்கள் கட்சிக்கு அரசியல் ஆலோசனை வழங்க, ஒரு பிராமணரை நியமித்து கொண்டனரே… அவரிடம் அவர் அணிந்திருக்கும் பூணுாலை கழற்றி விட்டு வந்து, எங்களிடம் பணியாற்றுங்கள் என்று நிபந்தனை போட்டுத் தான் பணியாற்ற அனுமதித்தனரா?முதல்வர் இனியும் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல. இப்படி பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[3].

சுப.வீரபாண்டியனுக்கு ‘தாம்ப்ராஸ்‘ கண்டனம்: ”முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி விமர்சித்தார் என்பதற்காக பூணுால் குறித்து அநாகரிகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் கருத்து தெரிவித்த திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலர் சுப.வீரபாண்டியனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் ‘தாம்ப்ராஸ்’ கண்டனம் தெரிவித்து உள்ளது[4]. சங்க மாநில தலைவர் என். நாராயணன் கூறி உள்ளதாவது[5]: “ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் தனிப்பட்ட முறையில் கூறிய கருத்து, ஒட்டுமொத்த பிராமண சமூகத்தின் கருத்து என எண்ணுவது, பகுத்தறிவுக்கு உகந்ததா? ஓர் இனத்திற்கு எதிராக வன்முறையை துாண்டுவதாக அமைந்துள்ள சுப.வீரபாண்டியனின் செயல்பாடு நடுநிலையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 1967, தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி, ‘பூணுாலை கையில் பிடித்து கொண்டு தி.மு.க.,விற்கு ஓட்டளியுங்கள்‘ என்று பாடுபட்டு, தி.மு.க., முதன் முதலில் ஆட்சியில் அமருவதற்கு பூணுால் வெளியே வந்தததை மறுக்க முடியுமா? “

திமுகவும், பிராமணர்களும்: நாராயணன் கூறியது “கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் பாண்டே என்ற பூணுால் அணிந்துள்ள பிரமாணர், தி.மு.க.,விற்கு வியூகம் அமைத்து கொடுத்து அக்கட்சியை வெற்றி பெற செய்த போதும், பூணுால் வெளியே வந்தததை மறக்கத் தான் முடியுமா? இந்த உண்மைகள் எல்லாம் தி.மு.க.,வினருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், ஆட்சியில் உள்ள தி.மு.க.,வை காக்காய் பிடித்து இயக்கம் நடத்துவோருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பூணுால் தொன்று தொட்டு வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. தேவைப்படும் தருணங்களில் எல்லாம் தொடர்ந்து வெளிவரும். பூணுால் அறுப்பு மற்றும் இனப்படுகொலை போன்ற பிரசாரங்களை புறம்தள்ளி, தமிழக மக்களுக்கு தன் கடமைகளையும், சேவைகளையும் தொடர்ந்து பெருந்தன்மையாக செய்து வரும் பிராமண சமூகம் குறித்து தமிழக மக்கள் நன்கு அறிவர். சுப.வீரபாண்டியனின் அநாகரிக மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்பாட்டை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் அமைத்துள்ள குழுக்களில் இருந்து அவரை முதல்வர் கத்தரித்து விட வேண்டும்,” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
© வேதபிரகாஷ்
23-10-2022.

[1] இந்த வாதமே தேவையற்றது, இதுவரை பிராமணர்கள் தொடர்ந்து எல்லாமுறைகளிலும் தாக்கப் பட்டு வந்துள்ளனர், ஆனால், அரசியல் ரீதியில் யாரும், ஒன்றும் செய்யவில்லை, செய்து விட முடியவில்லை. அதனால் தான் அவர்கள் ஒதுங்கி போய், தங்களது வேலைகளை செய்து கொன்டிருக்கிறார்கள்.
[2] தினமலர், தி.மு.க., ஆதரவு இயக்கங்களின் அநாகரிக, அராஜக அரசியல்: வானதி கடும் கண்டனம், Updated : அக் 23, 2022 10:36 | Added : அக் 23, 2022 10:31
[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=3152818
[4] தினமலர், சுப.வீரபாண்டியனுக்கு ‘தாம்ப்ராஸ்‘ கண்டனம், Added : அக் 24, 2022 06:10