போலி தங்கக்காசு கொடுத்து சாமியாரை ஏமாற்ற முயன்ற ஐவர் கைது
ஏப்ரல் 23,2010,00:00 IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18042
ஞானஜோதியை ஏமாற்றிய பகுத்தறிவு ஜோதி: திருச்சி: சாமியாரிடம் 12 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, போலி தங்கக்காசு வழங்கி ஏமாற்ற முயன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குப்பம்பாளையம் அடுத்த மாடப்பள்ளி என்ற இடத்தில் ஆசிரமம், சித்த வைத்திய ஆய்வு மையம் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவர் அருள் ஞானஜோதி.
கடன் கொடுக்கும் சாமியார்: இவருடைய ஆசிரமத்துக்கு, அடிக்கடி வந்து செல்லும் வேலூரை சேர்ந்த பாலன் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த தர்மராஜ் ஆகியோர், சாமியாருடன் நெருங்கி பழகினர். சாமியார் அருள் ஞானஜோதி, ஆசிரமத்தை நடத்த அதிகளவு பணம் தேவைப்படுவதாக, தர்மராஜ், பாலன் ஆகியோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்ட பாலன், தனியார் ஒருவரிடமிருந்து குறைந்த வட்டியில் ஒரு கோடி ரூபாய் பெற்று தருவதாகவும், அதற்காக 10 லட்சம் ரூபாய் கமிஷன் தனக்கு தர வேண்டும் என்றும் கூறினார். அதற்கு சம்மதித்து, சாமியார் 10 லட்சம் ரூபாயை பாலனிடம் வழங்கியுள்ளார்.
தங்கக்காசு புதையல்: அதன்பின், பாலன் நாமக்கல் வருவதை நிறுத்திக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து, சாமியார் வெளியே செல்லாமலிருந்து வந்தார். இந்நிலையில், தர்மராஜ் சாமியாரை அணுகி, ‘பாலனிடம் நீங்கள் கொடுத்து ஏமாந்த பணத்தை ஈடுகட்ட ஒரு வழி இருக்கிறது’ என்று கூறியுள்ளார். சாமியாரும் என்னவென்று கேட்டுள்ளார். அப்போது தர்மராஜ், தான் தங்கக்காசு புதையல் எடுத்ததாகவும், அதை என்னால் வெளியே மாற்ற முடியவில்லை என்றும் கூறி, 12 லட்சம் கொடுத்தால் மூன்றரை கிலோ எடையுள்ள தங்கக்காசுகளை தருவதாக கூறியுள்ளார். இதையும் நம்பிய சாமியார், தர்மராஜிடம் 12 லட்சம் கொடுத்துள்ளார். அதை பெற்றுக் கொண்ட தர்மராஜ், ‘திருச்சியில் வந்து தங்கக்காசுகளை பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார். இதனால், சாமியாருக்கு தர்மராஜ் மேல் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து, அவர் போலீசில் புகார் செய்தார்.
தங்கமூலாம் பூசப்பட்ட காசுகள் கொடுத்து ஏமாற்றும் பகுத்தறிவு சாமியார்கள்: நேற்று முன்தினம், இரவு தர்மராஜ் சொன்ன இடத்தில் சாமியார் காத்திருந்தார். அவரை பின் தொடர்ந்து, தனிப்படை போலீசாரும் மறைவாக காத்திருந்தனர். அப்போது காரில் வந்த கும்பல் , ஒரு பையை சாமியாரிடம் கொடுத்து விட்டு வேகமாக செல்ல முயன்றது. மறைந்திருந்த தனிப்படை போலீசார், காரில் வந்த ஐந்து பேரை பிடித்தனர். இரண்டு பேர் தப்பிச் சென்று விட்டனர். பின், அந்த பையிலிருந்த தங்கக்காசுகளை சோதித்து பார்த்ததில், அவை செப்புக்காசுகள் என்பதும், மேலே தங்கமூலாம் பூசப்பட்டது என்பதும் தெரிந்தது. பிடிபட்டவர்கள், திருவண்ணாமலை களம்பூர் பிச்சாண்டி என்கிற குப்புசாமி (37), ஆரணி ரவி (39), வேலூர் ஆற்காடு அசோக் (22), குடியாத்தம் ரவிக்குமார் (29), வேலூர் கழனிவாக்கம் ராம்தாஸ் (29) என்று தெரிந்தது. இவ்வழக்கில், முக்கிய குற்றவாளிகளான தர்மராஜ் மற்றும் பாலன் ஆகியோரை போலீசார் தேடுகின்றனர்.