சீமான் – பிரபாகரன் சந்திப்பு: திராவிடத்துவ பொய்களா, உண்மை மறுப்பா, சரித்திர மறைப்புகளா, நடப்பது என்ன?
திராவிடத்துவாதிகளின் சமகால நிகழ்வுகளைப் பற்றி பலவித கருத்துகள் ஏன்?: ஈவேரா பேசியது எழுதியது என்று பல குறும்புத்தகங்கள், தொகுப்பு நூல்கள் பலர், பலவிதமாக வெளியிட்டிருக்கிறார்கள் என்பது பற்றி முன்னமே எடுத்துக் காட்டியுள்ளேன். ஈவேரா யாரை சந்தித்தார் என்ன பேசினார் என்பது பற்றிக் கூட தெளிவான தகவல்கள் இல்லை. ஏன் ஜின்னா-அம்பேத்கரை சந்தித்தது பற்றியே தெளிவான உண்மையான தகவல்கள் இல்லை. அந்நிலையில் இப்பொழுது, சீமான் சொன்னதை விமர்சித்து திராவிட கட்சிகள், விமர்சித்திருப்பது நோக்கத்தக்கது. அறுபது எழுபது ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றியே இவ்விதமாக, மாறுபட்ட கருத்துகள் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இவர்கள் உண்மையில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்து இருக்கிறார்களா அல்லது பதிவு செய்யப்பட்டதை மறைக்கிறார்களா என்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு தோன்றுகிறது.
சீமான் பிரபாகரனை சந்தித்த விவகாரமும், சர்ச்சையும்: பிரபாகரன் மற்றும் ராஜிவ் கொலையாளிகள் பற்றிய விவரங்கள் எப்படி அரசியலாக்கப் பட்டிருக்கின்றனவோ, அதே போலத்தான், இஅந்த விவகாரமும் இருக்கிறது. இறந்த மனிதன் வந்து சாட்சி சொல்லப் போவதில்லை. பிரபாகரனைச் சந்தித்த பல நேரங்களில் கண்ணீரே என் பதில் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்[1]. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்த நாள் விழா, நவ.26, 2019 அன்று) சென்னை போரூரில், நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது[2]. எல்.டி.டி.இ தடை செய்யப் பட்ட இயக்கமாக இருந்தாலும்,ஐத்தகைய கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப் பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனை நேரில் சந்தித்தது குறித்துப் பேசினார்[3]. அப்போது, “பிரபாகரனை நேரில் சந்தித்தபோது, நான் என்ன உணவு உண்டேன் என்பதைக் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் எழுதிக்கொண்டிருந்தார். “சாப்பிடுவதை ஏன் எழுதுகிறீர்கள்” என அவரிடம் நான் கேட்டேன். அதற்கு நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதை பிரபாகரனுக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார். ஒரு தலைவர் தன் தம்பி என்ன சாப்பிடுகிறார் என்பதைக் கூட தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார். அந்த சமயத்தில் அழுவதைத் தவிர எதுவுமே செய்ய முடியவில்லை. பல நேரங்களில் பிரபாகரன் என்னுடன் பேசும்போது கண்ணீரைத் தவிர வேறு பதில் என்னிடம் இருக்காது. குறிப்பாக அவர் எம்ஜிஆரைப் பற்றி பேசும்போது மெய் சிலிர்த்துவிடும். இயல்பாகவே மெதுவாகப் பேசும் பிரபாகரன், எம்ஜிஆரைப் பற்றி பேசும்போது மிகவும் மெதுவாகப் பேசுவார். அந்த நேரங்களில், நான் தலைகுனிந்தபடி அழுது கொண்டேதான் இருப்பேன். அதற்கு முன்பு எம்ஜிஆரை பற்றி எந்த மதிப்பீடும் இல்லை. இலங்கைக்கு வண்டி ஏறும் வரை, நான் கருணாநிதியின் ஆள். ஒரு சத்தியத் தலைவனின் பிறந்த நாளில் நான் சத்தியத்தைப் பேசுகிறேன்“. இவ்வாறு சீமான் பேசினார்[4].
அச்சந்திப்பு பற்றி ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு 10 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது; இதில் 4 நிமிடங்கள் சோதனை செய்வதற்கே போய்விடும் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்[5]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்[6], “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனோடு மாதக்கணக்கில் பேசியவர்கள், அவரோடு தங்கியிருந்தவர்கள், போராட்ட களத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், போராட்ட களத்தில் உடன் இருந்தவர்கள் , வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை. ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் பேசாமல் இருக்கிறார்கள்.. ….சினிமா எடுக்க நல்ல இயக்குனர் தேவை என்று தலைவர் கேட்டு கொண்டதன் பேரில் கொளத்தூர் மணி தான் சீமானை தேர்வு செய்து ஈழத்திற்கு அனுப்பி வைத்தார்.. ….தலைவர் பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம் மட்டும் தரப்பட்டது. அதில் நான்கு நிமிடங்கள் தலைவரை சந்திப்பதற்கு முன்பான சோதனை செய்வதற்கே போய்விடும், நான் தலைவரை சந்தித்த போதும் அப்படி தான் சந்தித்தேன்…………..இந்த 10 நிமிட சந்திப்பை வைத்து கொண்டு சீமான் அவர்கள் மாத கணக்கில் பிரபாகரனோடு பேசியதாகவும், அவரோடு தங்கியிருந்ததை போலவும், ஆமைகறி சாப்பிட்டதாகவும் கதை சொல்லி வருவது கைதட்டு வாங்குவதை தாண்டி ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை.
விடுதலை ராஜேந்திரன் தொடர்ந்து சொன்னது[7]: “அந்த சந்திப்பின் போது உடன் இருந்த புலிகள் தற்போதும் கனடாவில் இருந்து கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்த பிறகும் அவர் இவ்வாறு பேசிவருவது சரியல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்[8]. தற்போது கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்த போது வைகோ அவர்கள் வழக்கம் போல் டெல்லியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தினை நடத்தினார். நாங்களும் சென்னையில் நடத்தினோம் இவர் எதையுமே செய்யவில்லை. மாறாக பிரபாகரன் படத்தை போட்டுக்கொண்டு தமிழகத்தில் இவர் தான் பிரபாகரன் போன்ற தோற்றத்தை கொடுத்து வருகிறார். சீமானின் பொய் பிததலாட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்,” என்றும் விடுதலை ராஜேந்திரன் வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்[9].
இலங்கை எம்.பி சீமானைக் கண்டித்தது: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும், பிரபாகரன் உடன் இருந்தது குறித்தும், ஈழப் பிரச்சனைகள் தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவையில்லாமல் மேடைதோறும் பேசி வருகிறார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை மட்டகளப்பு எம்.பி. யோகேஸ்வரன், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, சீமான் போன்ற அரசியல்வாதிகள் எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகு, வெறும் பேச்சு பேசி வருவதாக தெரிவித்தார்[10]. மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்று கேள்வி எழுப்பினார் யோகேஸ்வரன்[11]. விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்களாக எப்போதும் இருந்துள்ளார்கள். அப்படி இருக்கும் போது ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இங்குள்ளவர்கள் பேசுகிற பேச்சால் தங்களுக்குத் தான் பிரச்சனை என்றார். அதோடு, சீமான் தாங்கள்தான் கொன்றதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் ஆதாயத்திற்கு பேசும் பேச்சால் தங்களுக்கு தான் பிரச்சனை என்று வருந்தியவர். இவர்கள் தொடங்கி வைத்துவிட்டு உட்கார்ந்து விடுவார்கள் பாதிப்பு அங்குள்ள மக்களுக்கு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பேசினார்.
ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டியது: ஈவேரா, ஜின்னா அம்பேத்கரை சந்தித்து என்ன பேசினார் என்று தெரியாமல் இருப்பது போல, இங்கும் சீமான் பிரபாகரனை சந்தித்து பற்றி கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதெல்லாம் இப்போது தமிழகத்துக்கு வேண்டிய முக்கியமான விஷயங்களா என்று தெரியவில்லை, இருப்பினும் ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டு வருகிறார்கள். அவர்களே சீமான் சொன்னது பொய் என்று எடுத்துக் காட்டுகிறார்கள். பிறகு, யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பது பற்றி மற்றவர்கள் கவலைப்படாமல் இருக்கலாம், ஆனால், ஆராய்ச்சியாளர்களுக்கு இது பெரிய தலைவலியாக, பிரச்சினையாக, மர்மமாக இருக்கிறது ஆராய்ச்சி எனும் பொழுது, ஆராய்ச்சியாளன் மூல ஆவணத்தைப் பார்த்து, படித்து, தன்னுடைய கருத்தை தொகுத்து எழுத வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இங்கே அடுத்தவர்கள் சொல்வதை, வைத்துக்கொண்டு தான்,ஆராய்ச்சி செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, திராவிடம், திராவிடர் திராவிட இயக்கம் போன்றவற்றில் ஆராய்ச்சி செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
© வேதபிரகாஷ்
02-12-2019
[1] தமிழ்.இந்து, பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன் நான் கருணாநிதியின் ஆள்: சீமான் பேச்சு, Published : 27 Nov 2019 15:12 pm; Updated : 27 Nov 2019 15:12 pm.
[2] https://www.hindutamil.in/news/tamilnadu/527442-seeman-talks-about-prabhakaran.html
[3] மாலைமலர், பிரபாகரன் பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்க்கிறேன் – சீமான் நெகிழ்ச்சி, பதிவு: நவம்பர் 26, 2019 11:59 IST.
[4] https://www.maalaimalar.com/news/district/2019/11/26115947/1273253/Prabhakaran-birthday-Seeman-statement.vpf
[5] தமிழ்.ஒன்.இந்தியா, பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்டது 10 நிமிடம் மட்டும்தான்..விடுதலை ராஜேந்திரன் , By Mathivanan Maran | Updated: Sunday, December 1, 2019, 19:08 [IST].
[6] https://tamil.oneindia.com/news/chennai/viduthalai-rajendran-comments-on-seeman-s-story-on-prabhakaran-370126.html
[7] https://tamil.asianetnews.com/politics/seman-is-alier-told-viduthalai-rajendran-q1v8f7
[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சீமானின் பொய், பித்தலாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையா ? கொந்தளித்த விடுதலை ராஜேந்திரன் !!, By Selvanayagam PChennai, First Published 2, Dec 2019, 9:00 AM IST…
[9] https://tamil.asianetnews.com/politics/seman-is-alier-told-viduthalai-rajendran-q1v8f7
[10] நக்கீரன், சீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்… திருமுருகன் காந்தி யாரு?… கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி!, Published on 02/12/2019 (17:04) | Edited on 02/12/2019 (17:16)
[11] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/srilankan-tamil-mp-speech-about-thirumurugan-gandhi-and-seeman