கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (2)!
திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலம் என்ன?: திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலத்தை பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது[1]. திருக்குறள் தேதியை இக்கால ஆராய்ச்சியாளர்கள் 9ம் நூற்றாண்டு வரை இழுத்துள்ளனர். நவீனகால அறிஞர்கள் 200 BCE முதல் 800 CE வரை இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். திராவிடத்துவவாதிகள் போற்றும் காமில் வேய்த் ஸ்வெலெபில் என்பவரே திருவள்ளுவரது காலம் 400-500 CE என்று 1974ல் குறுப்பிட்டார்[2]. தமிழக அரசு 31 B.C. E என்று தீர்மானித்தாலும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தனித்தமிழ் இயக்கம் 1922ல் மறைமலை அடிகள் தலமையில் 500க்கும் மேல் அறிஞர்கள் கூடி, தமிழர்களுக்கு ஒரு தனியான நாட்காட்டி (calendar) இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்றபடி திருவள்ளுவர் ஆண்டு என்பதனை உருவாக்கினர். அதன்படியே திருவள்ளுவர் பிறந்த வருடம் 31 BCE (Before Current Era) என்று நிர்ணயித்தனர்! 1971ல் கருணாநிதியின் தலமையில் அதனை ஏற்றுக் கொண்டது. ஆனால், எவ்வாறு அவர்கள் அவ்வாறு தேதியைக் கண்டுபிடித்தனர் என்பது யாருக்கும் தெரியாது! [அப்பொழுது அவர்கள் கிமு, கிபி என்றுதான் குறிப்பிட்டார்கள்][3].
ஜோதிடம்-வானியல் ரீதியில் தேதி கண்டுபிடிக்கப்பட்டதா?: இரா. இளங்குமரனார் என்ப்வர் கொடுக்கும் விவரங்கள்[4], “மறைமலை அடிகளார், திருவள்ளுவரைப் பற்றிக் கூறிய தலைமைப் பொழிவில், “திருவள்ளுவ நாயனார், கிறித்து சமய முதல்வரான ஏசு முனிவர் பிறப்பதற்கு முப்பதாண்டுகள் முன்னரே பிறந்தருளினார் என்பதை, மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலிலே பலநூற் சான்றுகள் கொண்டு விளக்கிக் காட்டியிருக்கின்றாம். அதன் விரிவை அங்கே கண்டு கொள்க” (செந்தமிழ்ச் செல்வி. 13:550) என்றார். “இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர்தம் திருநாளாய வைகாசி அனுடத்தன்று வள்ளுவர் விழாக் கொண்டாடுவதற்கான முறைகளைத் தேர்ந்து அமைப்பதற்காகவே இக்கழகம் கூட்டப்பட்டது” என்கிறது திருநாட்கழக அறிக்கை-1 (செந்தமிழ்ச் செல்வி. 13:335). திருவள்ளுவர் திருநாள் கி.மு. 31 வைகாச அனுடம் என்றே தீர்மானித்தார் அடிகள். அதிலிருந்து தி.மு.; தி.பி. என்னும் வழக்கம் தமிழ்ப்பற்றாளரிடம் உண்டாயது. நாட்காட்டி நாட்குறிப்பு என்பனவும் ஆக்கப்பட்டன! பாவாணர் பாவலரேறு வழிஞர் திருவள்ளுவர் ஆண்டைப் பற்றினர்”. இப்படியொரு கருத்தும் காணப்படுகிறது[5], “முதலிரு கழக இலக்கியமும் அழிக்கப்பட்டபின், தமிழ் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தாங்கிக்கொண்டிருக்கும் இருபெரு நூல்களுள் ஒன்றான திருக்குறளின் காலம், அதை இயற்றிய திருவள்ளுவரின் காலம், இன்ன நூற்றாண்டில் இன்ன வாண்டிலிருந்து இன்ன வாண்டுவரை என்று திட்டவட்டமாய்க் கூறுதற்கியலாவிடினும், தொல்காப்பியர் காலமாகிய கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கும் கடைக்கழக முடிவாகிய கி. பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாய்க் கிறித்துவிற்கு முந்தியதென்று கொள்வது, பெரும்பாலும் குற்றத்திற்கிடமில்லாததும் ஏறத்தாழ உண்மையை ஒட்டியதுமாகும்”.
உலகப்பொதுமறையா, திராவிடர்களின் தனித்துவம் பாராட்டும் நூலா?: தனித்தமிழ்இயக்கம் ஆரம்பித்தபோது, திருக்குறள் தமிழருக்குத்தான் சொந்தம் என்பது போன்ற ஒரு குழப்பம் இருந்தது. பிறகு, திருவள்ளுவர் ஜைனர் என்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள். இல்லை அவர் வைணவர் தான், சைவார் தான் என்றெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனால், கோல்வால்கர் என்ன சொன்னார் என்பதனை நோக்கவேண்டும். “எந்த ஒரு வழிபாட்டையும், கடவுள் பெயரையும் குறிப்பிடாமல் மோட்சத்தைப் பற்றிய விவரத்தை கூறுகிறது. அதனால், அது எந்த பிரிவினரையும் சேர்ந்த நூலாகாது. மகாபாரதத்தில் காணப்படும் சமூக வாழ்க்கை அப்படியே திருக்குறளில் காணப்படுகிறது. இந்துவிடம் தவிர, இத்தகைய சிறப்பான சமூக வாழ்க்கை தத்துவம் வேறேங்கும் காணமுடியாது. இந்து சிந்தனைகளை விளக்கும், பவித்ரமான இந்து மொழியில் உள்ள ஒரு தூய்மையான நூல் ஆகும்”. இப்படி சொன்னது தான், இன்றைக்கு வீரமணிக்கு உரைக்கிறது. அதனால், மறுபடியும் திராவிடத்திற்குள் சுருக்கப் பார்க்கின்றனர் போலும்!
தொல்காப்பியத்தின் காலம்: தொல்காப்பியத்தின் காலமும், தமிழ் ஆராய்ச்சியாளர்களிடம் படாத பாடு பட்டது. இலக்கியம் முன்னதா, இலக்கணம் முன்னதா என்ற “கோழி-முட்டை” விவாதங்களை வைத்துக் கொண்டு காலந்தள்ளினர். பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும்.
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி”: கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி – தமிழ் குடி என்று தமிழின் தொன்மை அனாதியானது என்று விளக்கம் கொடுத்தனர். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்று மாற்றி விளக்கம் கொடுத்தனர். ஆனால், சரித்திர ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வாய்பந்தல் போட்டே காலந்தள்ளினர். திராவிடத்துவவாதிகளான நெடுஞ்செழியன் போன்றோர் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு என்றும், ரிக் வேதத்துக்கு முற்பட்டது, என்றெல்லாம் பேசினர். இவர்கள் ஆதாரங்கள் பற்றி கவலைப்படுவதேயில்லை. இறையனார் களவியல் உரையின் முன்னுரையில் தான் முச்சங்களின் விவரங்கள் காணப்படுகின்றன. 12ம் நூற்றாண்டில் நக்கீரர் எழுதியதாக இந்நூல், ஒரு பார்ப்பனரின் நூலாகும். பிறகு திராவிடத்துவவாதிகள், இதனை எப்படி ஏற்றுக் கொள்கின்றனர்? “ஆரிய-திராவிட” இனவாதங்களை இன்றளவும் பிடித்துக் கொண்டு, கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டு, சித்தாந்தங்களை உண்மை என்று உறுதியாகப் பிடித்துக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். பிறகு, ஆராய்ச்சியாளர்கள் இவர்களது நிலையை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? பெரியார் திடலில் உள்ள இரண்டு அரங்களில் தங்களுக்கு என்று வேண்டப்பட்டவர்களை வைத்துக் கொண்டு, இவ்வாறு பேசிக்க்கொண்டும், குறும் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டும் காலம் தள்ளலாம். ஆனால், சரித்திர ரீதியில் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
© வேதபிரகாஷ்
19-09-2015
[1] His date of birth may have been as early as 200 BCE or as late as 800 CE.
the Tirukkural was written between 100 and 200 BC,
Considering all the facts given above we may infer that these two epics would have been written in a period from 130 to 150 A.D. If the date of Manimekalai is within 130 to 150 A.D., then Tirukkural must be having adate before this.
But these facts by themselves do not warrant the inference that theTirukkural must have been composed soon after the Tolkappiyam, and that therefore, the date of the Tirukkural is sometime between 300 B.C and 1 B.C.
The widely accepted date of Valuvar is 31 B.C. E
[2] Kamil Veith Zvelebil, A History of Indian Literature, Tamil literature, Otto Harrassowitz, Wiesbaden, Germany, 1974, p.119.
A date of the work sometime between A.D. 400-500 may be the best .
[3]https://indianhistoriography.wordpress.com/2010/01/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/
[4]முதுமுனைவர் இரா. இளங்குமரனார், திருவள்ளுவர் காலம், Oct 1, 2012, http://siragu.com/?p=4628
[5] http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=197&pno=148