குருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது – புதிய கல்வித் திட்டமும், கனிமொழியும், திராவிட கட்சிகளும்!
குருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது[1]: விடுதலை தொடர்கிறது, “புதிய கல்வித் திட்டத்தில் பள்ளிகள், பக்கத்தில் உள்ள ஆசிரமங்களுடன் இணைக்கப்படும் என்று சொல்லப் பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாகத்தான் சென்னை இந்து ஆன்மிகக் கண்காட்சியில் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்யும் ஏற்பாடாகும்[2]. ஒரு காலத்தில் குருகுல வாசம் என்ற முறை இருந்தது, மாணவர்கள் பகலில் எல்லாம் பிச்சை எடுத்துக்கொண்டு வந்த பொருள்களைக் கொண்டு, உண்டு உறைந்த காலகட்டம் அது. அத்தகைய காலம் அல்ல இது! அந்தக் கால கல்வி என்பதும் இன்றைக்குக் கவைக்குதவாது – காலாவதியான ஒன்றாகும். மீண்டும் அந்தத் திசை நோக்கி மாணவர்களை, மத்தியில் உள்ள பி.ஜே.பி. ஆட்சி அழைத்துச் செல்லுகிறதோ என்ற அய்யமும், அச்சமும் ஏற்படுகின்றன. குருகுலம் என்றாலே நமக்கு சேரன்மாதேவி குருகுலம்தான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. பார்ப்பனர்களுக்கு ஒரு வகையான தரமான உணவு – பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு மட்டமான உணவு பரிமாறப்படவில்லையா? குடிதண்ணீர்கூட தனித்தனியாக வைக்கப்பட்டு இருந்ததே! அந்தப் பேதா பேதத்தை ஒழித்துக் கட்டியவர்கள் தந்தை பெரியார் அவர்களும், டாக்டர் பி. வரதராஜூலு (நாயுடு) அவர்களுமேயாவார்கள். காங்கிரசை விட்டு தந்தை பெரியார் அவர்கள் வெளியேறு வதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றே!”.
இந்துத்துவா சக்திகள் தறிகெட்டு நிர்வாண ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன[3]: விடுதலை தொடர்கிறது, “மத்தியில் பி.ஜே.பி. , ஆட்சிக்கு வந்தநாள் முதற்கொண்டு இந்துத்துவா சக்திகள் தறிகெட்டு நிர்வாண ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன. மீண்டும் நாட்டை மனுதர்மப் பிற்போக்கு உலகத்திற்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றன. பிரதமர் உள்பட மத்திய அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ். கூட்டும் கூட்டங்களில் பங்கேற்பது கட்டாயம்; அந்தக் கூட்டத்தில், ஆட்சியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், திட்டங்கள்பற்றி ஆய்வு செய்யப்படுகின்றன. ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸின் சர் சங் சாலக் (தலைவர்) அறி வுறுத்துகிறார். அந்த அடிப்படையில்தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வருமுன் சென்னையில் ஒரு கல்லூரியில் இந்து – ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதைக் கவனிக்கத் தவறக்கூடாது”.
பாத பூஜை செய்வது – பிற்போக்குத்தனம் அல்லவா?[4]: விடுதலை தொடர்கிறது,”ஒரு பக்கத்தில் விஞ்ஞான மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ–எச்) வலியுறுத்துகிறது. அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் அரசமைப்புச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டைக் காலில் போட்டு மிதிக்கலாமா? பாத பூஜை செய்வது – பிற்போக்குத்தனம் அல்லவா? அதுவும் காலைக் கழுவுவது அசுத்தமான ஆரோக்கியமற்ற அஞ்ஞான செயல்பாடு அல்லவா! மாணவர்களுக்கு நோய்ப் பரவும் ஆபத்தில்லை என்று அறுதியிட்டுதான் கூற முடியுமா? இதில் மகிழ்ச்சிக்குரியது, பாராட்டக் கூடியது என்னவென்றால், மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி ஆற்றிய உரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் தோழர் து.ராஜா அவர்களும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்களும், அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் அவர்களும் வரவேற்று ஆதரவு தெரிவித்ததுதான்”.
சென்னையில் நடைபெற்ற இந்து ஆன்மிகக் கண்காட்சியில் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள்[5]: விடுதலை தொடர்கிறது, “இதுபோன்ற பொதுக் கொள்கைகளில் கட்சிகளைக் கடந்து ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் மரபு தோற்றுவிக்கப்பட்டால், ஆளும் கட்சியும் சட்ட விரோத, மதச் சார்புக் காரியங்களைச் செய்யத் தயங்குமே! சென்னையில் நடைபெற்ற இந்து ஆன்மிகக் கண்காட்சியில் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள், நடவடிக்கைகள் விசாரிக்கப் படவேண்டும். இவ்வளவுப் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளைச் செய்வதற்கு நிதி ஆதாயம் எங்கிருந்து வருகிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கறுப்புப் பணக்காரத்தன்மையின் வடிவமான கார்ப்பரேட் சாமியாரான ராம்தேவ்களை உரிய முறையில் விசாரித்தால், பல அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்கள் வெளிவரக்கூடும். பக்தி – இப்பொழுதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்குள் சென்றுவிட்டதே!”.
தமிழிசை கனிமொழி பேச்சுக்கு கண்டனம்[6]: டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[7]: “… பாராளுமன்றத்தில் சகோதரி கனிமொழி இந்து மதத்தில் குருவிற்கு பாத பூஜை செய்வது கூட இந்துத்துவா திணிப்பு என்கிறார்[8]. இவர்கள் போலி மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள்[9]. நல்ல பழக்கங்கள் கூட தவறாக சித்தரிக்கப்படுகிறது[10]. இது கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் உள்ளது. பெரியவர்கள், குருவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்[11]. இதற்கு மாணவர்கள் சமூகம் சரியாக வழி நடத்தப்படவில்லை. எல்லாமே தவறு என்பது தவறு. நான் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகரிடம் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடப்பது பற்றி கூறினேன். அதற்கு அவர் புதிய கல்வி கொள்கை இன்னும் முழுவடிவம் பெறவில்லை. வரைவு திட்டம்தான் உள்ளது. ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 வரை கருத்து தெரிவிக்க கால அவகாசம் உள்ளது. நிறைவேற்றப்படாத திட்டத்துக்கு தமிழகத்தில் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்று அவர் கேட்டார்”, இவ்வாறு அவர் கூறினார்.
நாத்திகம், இந்து-எதிர்ப்பு முதலியன தமிழ் சமுதாயத்தை மேன்படுத்த முடியாது: கடந்த 60 ஆண்டு காலம் திராவிடம், தனித்தமிழ், இந்தி-எதிர்ப்பு, பார்ப்பன-எதிர்ப்பு, கோவில்-இடிப்பு, கோவில் சொத்து கொள்ளை, இந்துமத விசயங்களில் தலையிடுவது,….. முதலிய காரியங்கள் தமிழ்நாடு மக்களை விழிப்படைய செய்தது. 1960களிலேயே, இவையெல்லாம் எடுபடாமல் பக்திப்படங்கள் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படுத்தின. பிறகு, ஆதிபராசக்தி, அம்மா போன்ற பக்தி இயக்கங்கள் வளர்ந்தன. திகவினரே கலந்து கொள்கின்றனர், சபரி மலைக்கும் போய் வர்கின்றனர். படிப்பு, பாடதிட்டம் முதலியவற்றில் பிந்தங்கியதால், தமிழக மாணவர்கள் தாம் பின்தங்கினர். நன்றாகப் படிப்பவர்கள் பற்றி பிரச்சினை இல்லை. ஆனால், மற்றவர்களை ஏமாற்றி படுகுழியில் தள்ளியது இவர்களின் சித்தாந்தம் தான். இங்கும் தங்களது மகன் – மகள், பேரன் – பேத்திகளை ஆங்கில பள்ளி, கான்வென்ட், சிபிசிஇ போன்ற முறைகளில் படிக்க வைத்து அல்லது அயல்நாடுகளுக்கு அனுப்பி வைத்து உயர்ந்து விட்டனர். ஆனால், சாதாரண மக்களின் மகன் – மகள், பேரன் – பேத்திகளை தமிழ் அல்லது போசமான பாடதிட்டங்களில் படிக்க வைத்து தரத்தை குறைத்தனர், அவர்களது வாழ்க்கையினைக் கெடுத்தனர். இந்நிலையில், அவர்கள் பண்புடன், நல்ல குணங்களுடன் வளர, இருக்க பெற்றோரைப் போற்ற வேண்டும் என்று நிகழ்சிகள் இருந்தால், அவற்றை “புதிய கல்வி திட்டத்துடன்” இணைத்து கலாட்டா செய்கின்றனர். இது திராவிடக் கட்சிகளில் போலித்தனம், கையாலாகாதத் தனம், ஏனாற்றுவேலை, சமுதாய சீரழிப்பு போன்ற தீயசக்திகளைத் தான் வெளிப்படுத்துகிறது. இதனால் தான், அவர்கள், இவர்கள் மீதான நம்பிக்கையினையும் இழந்து வருகின்றனர்.
© வேதபிரகாஷ்
10-08-2016
[1] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html
[2] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18;
[3] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18
[4] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html
[5] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18
[6] மாலைமலர், மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம்: கனிமொழி எம்.பி.க்கு டாக்டர் தமிழிசை கண்டனம், பதிவு: ஆகஸ்ட் 06, 2016 12:08; மாற்றம்: ஆகஸ்ட் 06, 2016, 15:29.
[7] http://www.maalaimalar.com/Election/ElectionNews/2016/08/06120836/1031074/Tamilisai-soundararajan-Condemn-Kanimozhi-MP.vpf
[8] நக்கீரன், குருவிற்கு பாத பூஜை செய்வது இந்துத்துவா திணிப்பா? கனிமொழிக்கு தமிழிசை கண்டனம், பதிவு செய்த நாள் : 6, ஆகஸ்ட் 2016 (13:0 IST); மாற்றம் செய்த நாள் :6, ஆகஸ்ட் 2016 (13:0 IST)
[9] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=170532
[10] Deccan Chronicle., Why so much dissent against draft policy, asks BJP, J V Siva Prasanna Kumar, Published: Aug 9, 2016, 6:04 am IST; Updated: Aug 9, 2016, 6:05 am IST
[11] Dr Tamilisai also took strong exception to the DMK Rajya Sabha MP Kanimozhi for her remarks on certain Hindu practices and said prostrating before teachers and seeking their blessings by touching their feet is an act to show students’ respect for teachers. “There is nothing wrong in this gesture,” she added.