தேனி : ‘தி.மு.க., ஒன்றிய செயலர் டார்ச்சர் தாங்க முடியவில்லை’ எனக்கூறி ஊராட்சி பெண் தலைவர், துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஏழு பேர் நேற்று பதவியை ராஜினாமா செய்ய, கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒன்றியம், கோகிலாபுரம் ஊராட்சி தலைவியாக இருப்பவர் இன்பவள்ளி. ‘ஊராட்சி பணிகளில் ஒன்றிய தி.மு.க., செயலர் சேகர் தலையிடுகிறார்’ என கூறி மொத்தமுள்ள ஒன்பது ஊராட்சி உறுப்பினர்களில், துணை தலைவர் உட்பட ஆறு பேருடன் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அவர் கூறியதாவது: உத்தமபாளையம் ஒன்றிய செயலர் சேகர், எங்கள் ஊராட்சி பணிகளில் குறுக்கிடுகிறார். குடிபோதையில் வந்து என்னையும், என் குடும்பத்தாரையும் தரக்குறைவாக பேசி மிரட்டுகிறார். ஊராட்சி திட்டங்களை, மக்கள் நலப்பணிகளை செயல்படுத்த தடையாக இருக்கிறார். சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவள் என்பதால், அவருக்கு பணிந்து நடக்க வேண்டும் என்கிறார்.
இலவச கேஸ் இணைப்பிற்கு, ஒரு இணைப்புக்கு 150 ரூபாய் வசூல் செய்து தர வேண்டும் என மிரட்டினார். அதற்கு உடன்படாததால் எங்களை தரக்குறைவாக பேசினார். ரவுடிகளை அனுப்பி, இருசக்கர வாகனத்தில் வந்த துணை தலைவர் முருகனை தாக்கியுள்ளார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, எனது பணிகளை செய்ய முடியவில்லை. இதனால், நானும், அவரால் பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய உள்ளோம். கலெக்டரிடம் எங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கலெக்டர் முத்துவீரன், டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி ஆகியோர் அலுவலகத்தில் இல்லாததால், ராஜினாமா கடிதத்தை கொடுக்க காத்திருந்தார். தகவல் அறிந்த தி.மு.க., மாவட்ட செயலர் மூக்கையா சமரசம் பேச அழைத்தார். ஒன்றிய செயலர் சேகர், ஊராட்சி தலைவர் இன்பவள்ளி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஆகியோரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.