இந்துத்துவ பாதையில் திமுக: பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி: உதயநிதி விபூதி பூசுவது, துர்கா கோவில் கட்டுவது முதலியன(2)

செக்யூலரிஸ வாழ்த்துகளிலிருந்து, கம்யூனலிஸ வாழ்த்துகள்: ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்றபண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறும் திமுக, தீபாவளிபண்டிகைக்கு வாழ்த்து கூறுவதுஇல்லை. ஆனால், திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் இந்த ஆண்டு முதல்முறையாக ‘தீப ஒளித் திருநாள்’ கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தவிர, திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் ஒன்றியச் செயலாளர் போன்ற முக்கிய நிர்வாகிகளும் சமூக ஊடகங்களில் முதல்முறையாக இந்த ஆண்டு தீபாவளி வாழ்த்துச் செய்திகளை பதிவிட்டனர். அதாவது, பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடுவது போல, திமுக அரசியல்வாதியை வைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, ஓட்டுக்குத் தான் வாழ்த்துத் தெர்விக்கின்றனர் என்பது இந்துக்கள் தெரிந்து கொள்வார்கள்.

சிறுபான்மையினரின் வாக்குகளை தக்கவைக்கும் அதேநேரம், பெரும்பான்மையினரின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது: முன்பெல்லாம் எங்காவது கோயில் இடிக்கப்பட்டால் பாஜக, இந்து அமைப்பினர் மட்டுமே போராடுவார்கள். சமீபகாலமாக கோயில்களுக்காக திமுகவினரும் குரல் கொடுக்கின்றனர். தூத்துக்குடியில் விநாயகர் கோயில் அகற்றப்பட்டதை கண்டித்து திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் போராடியதும், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆர்.எஸ்.பாரதி வழிபட்டதும் முக்கிய நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, வரும் 2021 பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாக போராடி வருகிறது. அமித் ஷாவின் சென்னை வருகைக்குப் பிறகு திமுக எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. சிறுபான்மையினரின் வாக்குகளை தக்கவைக்கும் அதேநேரம், பெரும்பான்மையினரின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்று கவனத்துடன் திமுக காய் நகர்த்தி வருகிறது. இந்த பகுத்தறிவு சூழ்ச்சி, நாத்திக தந்திரம், மற்றும் அரசியல் யுக்தி எந்த அளவுக்கு உதவும் என்பது 2021 தேர்தல் நிரூபித்து விடும்.

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தலைவர் ராம. சேயோன், திமுகவின் இந்து முகமா?: ராம.சேயோன் என்பவர் –
- மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்
- திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன்
- நாகை வடக்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர்கள் அணியின் மாவட்ட அமைப்பாளரும்,
- நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சட்ட பாதுகாப்பு குழு தலைவர்
- மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர்
- மயிலாடுதுறை ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளர்
பல பொறுப்புகளில் இருக்கிறார் என்று தெரிகிறது. 20-11-2020 அன்று ஆதீனத்தை உதயநிதியை சந்திக்கச் செய்தது, பரிசு பொருட்களை பறிமாறிக் கொண்டது, பிரசாதம் பெற்றது, ஆசிர்வாதம் பெற்று விபூதி பூசிக் கொண்டது, புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு, முதல் பிரதியைப் பெற்றது, என்று அனைத்தையும் ஏற்பாடு செய்தது, இந்த ராம.சேயோன் தான். திமுகவின் இந்து முகம் போன்று, இவர் காட்டப் படுகிறார் மற்றும் செயல்படுகிறார் என்று தெரிகிறது. ஆகவே, எல்லாவற்றையும் கவனிக்கும் போது, மென்மையான இந்துத்துவம் கடைபிடிக்க அரம்பித்துள்ளது திண்ணம், உறுதி.

இந்துவிரோதி ஸ்டாலின் திடீரென்று கோவில்களுக்கு வக்காலத்து வாங்குவது (மார்ச்.2020): ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் 2019 ல் விளக்கம் கொடுத்ததை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான கோயில்களை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.. அதாவது, பிரஹலாத் சிங், கலாச்சாரத் துறைஅமைச்சர், “……..மேலும் தொன்மையான கோவில்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் வர வேண்டும்,” என்று பாராளுமன்றத்தில் பேசினார். இதற்கு, தமிழக தொல்லியல் துறை ஆய்வறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழர்களின் நாகரிகத்தை – கலாசாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்தால் தி.மு.க சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்று அவை விளக்கின. இதுகுறித்து ஸ்டாலின் அறிக்கையும் வெளியிட்டுள்ளது தமாஷாக இருந்தது.

1991க்குப் பிறகு 2006, அதற்குப் பிறகு 2021 என்று பொருந்தி வருவது எப்படி? (செப்டம்பர் 2020): மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என தனது குலதெய்வம் கோயிலை புனரமைத்து வருகிறார் துர்கா ஸ்டாலின், இப்படி சில செய்திகள் வந்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து கட்டி வருகிறார்.
- கருணாநிதி குடும்பம் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில் கோயில், குளம் என பக்திமயமாக கடவுள் பற்றுதலோடு வலம் வருகிறார் ஸ்டாலின் மனைவி துர்கா. இவர் இவ்வாறெல்லாம் செய்வது புதியதல்ல.
- காசிக்கு எல்லாம் கூட சென்று வந்தார். ஆனால், புடவை வாங்கினேன் என்ற ரீதியில் பேசியது, தமாஷாக இருந்தது. ஆனால், நிச்சயமாக மாமனாரான நாத்திகரின் ஆன்மா சாந்தியடைவே சென்றது வெளிப்படையான உண்மை. பாவம் இல்லாத ஆன்மா எப்படி சாந்தி அடைந்தது என்பதை இல்லாத கடவுளைத் தான் கேட்க வேண்டும்.
- 1991ல் திருக்குவளைக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
- அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து, மறுபடியும் 15 ஆண்டுகள் கழித்து, 2006ல் ஒரு வாரம் விமர்சியையாக மகா கணபதி ஹோமம், 04-07-2006 அன்று நடந்தது. கணபதி ஹோமத்தை யார் செய்தார்கள் என்று ஈவேரா, அண்ணா அல்லது கருணாநிதி சமாதியில் தான் சென்ற் கேட்க வேண்டும்.
- பிறகு 08-07-2006 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. பூசாரி கலிய பெருமாள் மற்றும் ஊரார் எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். ஸ்டாலின் தவிர எல்லா குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதேப் போல, செய்திகளும் வெளி வந்தன.
- ஆக, மறுபடியும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆண்டு வருகிறது. அது அடுத்த ஆண்டுதான், ஆனால், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கப் போகின்ற வருடம். ஆனால், கோவில் மாறிவிட்டது போலும்!

அதிமுக, பிஜேபி என்ன செய்யப் போகின்றன?: ஜெயலலிதா இல்லாத நிலையில், அதிமுகவிற்கு அவரைப் போன்ற ஓட்டுக்களைக் குவிக்கும் தலைவர் இல்லை. அதனால் தான், இன்று வரை “அம்மாவின் ஆட்சி” என்றே பேசி வருகின்றனர். பிஜேபியைப் பொறுத்த வரையில், இது அவர்களுக்குப் பெருத்த இடி என்றே சொல்லலாம். ஏனெனில், அத்தகைய, “திராவிடத்துவ ஆன்மீகம்,” அல்லது “போலி ஆன்மீகம்” என்று, திமுக எப்படி பயன்படுத்தினாலும், அது அவர்களுக்கு சாதகமாகவே போகும். தேர்தல் பிரச்சாரத்தினால், மேடைப் பேச்சுகளால் பிஜேபிக்கு ஓட்டு கிடைக்காது. ஆக, திமுக
- திராவிடத்துவ மென்மையான இந்துத்துவம்
- இந்துத்துவ மென்மையான திராவிடத்துவம்
- திராவிடத்துவ நாத்திகம்
- திராவித்துவ இந்துவிரோத நாத்திகம்.
- திராவிடத்துவ இந்துத்துவம்.
என்று எதைப் பின்பற்றினாலும், ஒவ்வொரு வகையிலும் ஓட்டு கிடைக்கும். ஆனால், மற்ற கட்சிகளுக்கு என்ன கிடைக்கும்? திமுகவிற்கு 70 ஆண்டு விசுவாசத் தொண்டர்கள் உள்ளனர். அதனால் பதவிக்கு வந்த நீதிபதிகள், அதிகாரிகள் (எல்லாத் துறைகளையும் சேர்த்து) முதலியோர் உள்ளனர். அவர்களது மகள்-மகன் என்று அடுத்த தலைமுறை வாரிசுகள் உள்ளனர். அவர்கள் ஜாதி வாரியாக, விசுவாசமாக வேலை செய்து, பலன் பெற்று வருகின்றனர், நன்றாக சம்பாதித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.பிஜேபியினர் இந்த கட்டமைப்பை உடைக்க முடியுமா? திமுக போன்ற அஸ்திவாரம் இல்லாமல், 3% ஓட்டு வங்கியை வைத்துக் கொண்டு, ஆட்சியைப் பிடிப்பேன் என்று கனவு காண்பது அபத்தமானது.
© வேதபிரகாஷ்
30-11-2020
