மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது திராவிடர்களின் பகுத்தறிவா, மடத்தனமா?
மாட்டுக்கறியைத் தின்றுகொண்டே மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது நாதிகமா, பகுத்தறிவா?
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6281

பஞ்சகவ்யம் என்றால் என்ன? “கவ்யம்’ என்றால் “கவ்’ (பசு) சம்பந்தப்பட்டது என்று பொருள். பால், தயிர், நெய் என்னும் சத்தான மூன்று பொருள்களுடன், பாலுக்கு எதிரிடையானவையாகத் தோன்றும் கோமயம்(பசுஞ்சாணம்), கோமியம் (பசு மூத்திரம்) ஆகியவை கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இதை சாஸ்திரம், “”க்ஷீரம், ததி, ததா சாஜ்யம், மூத்ரம், கோமயம் ஏ ச, ” என்று குறிப்பிடுகிறது. இதை சிவனுக்கு அபிஷேகம் செய்வர். இதைப் பிரசாதமாக சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது.
மாட்டுக்கொட்டிலில் அமர்ந்து சாமி கும்பிடுங்க! பூஜையறை, சமுத்திரக்கரை, நதிக்கரை, தெய்வசன்னதி, மகான்களின் சமாதி ஆகிய புண்ணியமான இடங்களில் தெய்வநாமங்களைச் சொல்வது சிறப்பு. இந்த இடங்களை எல்லாம் விட கோடிமடங்கு நன்மை தரும் இடம் “கோஷ்டம்’ என்னும் மாட்டுக்கொட்டிலாகும். ஏனென்றால், பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும் குடிகொண்டுள்ளனர். சகல புண்ணிய தீர்த்தங்களும் அதன் உடம்பில் வாசம் செய்கின்றன. பிரம்மா உலகநன்மைக்காக காமதேனு பசுவினைப் படைத்தபோது, புனிதமான அதன் உடலில் குடியிருக்க அனைத்து தேவர்களும் முகம் முதல் வால்வரை ஓடிவந்து இடம்பிடித்துக் கொண்டனர். லட்சுமியும், கங்கையும் தாமதமாக வந்ததால் இடம் இல்லாமல் தயங்கி நின்றனர். காமதேனு கோமயமான பிருஷ்டபாகத்தில் (பின் பக்கம்) இடம் தந்து அவ்விருவரையும் தங்கும்படி வேண்டிக்கொண்டது. கோயிலுக்குச் சென்றால் குறிப்பிட்ட தெய்வங்களை மட்டுமே தரிசிக்க முடியும். ஆனால், பசுவின் உடம்பிலோ இல்லாத தேவதைகளே இல்லை. அதனால், நம் கண் முன்னே நடமாடும் கோயிலாக பசுமாடு அமைந்துள்ளது. பசுவிற்கு செய்யும் சேவை சகலதெய்வங்களுக்கும் செய்யும் புண்ணிய சேவையாகும்.
பேசும் விலங்கு: வாயில்லா ஜீவன் என்று பொதுவாக விலங்குகளைச் சொல்வார்கள். ஆனால், பசு மட்டும் ஒரே ஒரு சொல்லைப் பேசும். அதுதான் “அம்மா’. அடிவயிற்றிலிருந்து அம்மா என்று பசு கத்துவது, நம்மைப் பெற்ற தாயை நினைவூட்டும். அம்மா நமக்கு பாலூட்டி சீராட்டி வளர்த்தாள். பெற்றதாயின் கடமை கூட இரண்டு, மூன்று வயதோடு முடிந்து விடுகிறது. ஆனால், பசுவோ நம் வாழ்நாள் வரையிலும் நமக்குத் தேவையான பால், தயிர், நெய் என்று பலவித உணவுகளைத் தந்து நம்மைக் காப்பாற்றுகிறது. வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் ஏதும் சாப்பிட முடியாவிட்டாலும், பால் கொடுத்து காப்பாற்றுவார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை பால் மனிதனுக்கு அவசியம். மனிதன் இறக்கும் தருவாயில், அவனது வாயில் பால் ஊற்றுவதுண்டு. இறந்த பிறகு, சிதையிலும் பால் ஊற்றும் சடங்கு இருக்கிறது. அந்தவகையில், நம் உயிரைக் காப்பதிலும், வாழ்வோடு ஒன்றிப்போன பொருளாகவும் பசும்பால் உள்ளது. அதனால்தான் பசுவையும் நமது அன்னையாக எண்ணி “கோமாதா’ என்று பெயர் சூட்டி பெருமைப்படுத்தியுள்ளோம்.
செல்வவளம் பெருக கோபூஜை: பசுவின் உடம்பில் அத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அதில் சிறப்பம்சமாக செல்வ தேவதையான லட்சுமியையே குறிப்பிடுவர். லட்சுமி பசுவின் உடம்பில் இருக்கிறாள் என்பதை விட, பசுமாட்டினையே லட்சுமியாக பாவித்து வழிபடுகிறோம். திருமகள் வாசம் செய்யும் இடங்கள் ஐந்து. சுமங்கலிப் பெண்ணின் வகிடு, மலர்ந்த தாமரை, யானையின் மத்தகம்(தலை), வில்வ இலை ஆகிய நான்கைத் தவிர, பசுவின் பிருஷ்ட (பின்பகுதி) பாகத்திலும் அவள் குடியிருக்கிறாள். கோயில்களில் ஒவ்வொருநாளும் அதிகாலையில் கோபூஜை செய்யப்படும். அப்போது பசுவின் பின் பாகத்துக்கு பூஜை செய்வதைக் காணலாம். பசுவுக்குச் செய்யப்படும் கோபூஜையால் திருமகளான லட்சுமியின் அருள் பெருகும்.
கொம்புப் பால் அபிஷேகம்: சிவனுக்குச் செய்யப்படும் அபிஷேகங்களில் பசுவின் கொம்பினால் செய்யப்படும் பாலபிஷேகம் மிகவும் புனிதமானது. இதனால், முற்பிறவியில் செய்த பாவவினைகள் கூட நம்மை விட்டு அகன்று விடும். அதேபோல, பசுவின் வயிற்றில் இருந்து எடுக்கப்படும் கோரோசனை என்னும் வாசனைத் திரவியமும் வழிபாட்டில் பயன்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கூட மருந்து சாப்பிடும்போது “அனுபானம்’ என்ற பெயரில் பசும்பாலைக் குடிக்கும் முறை உண்டு. சங்கீதத்திலும் பசுவின் தோலைப் பயன்படுத்துகிறார்கள். தவில் போன்ற வாத்திய கருவிகளுக்கும் பசுவின் தோலையே பயன்படுத்துகிறார்கள்.
நீராடுங்கள்! நீறாடுங்கள்! தினமும் உடல்தூய்மைக்காக நீராடுகிறோம். நீராடினால் நம் உடல் மட்டும் தூய்மையாகும். அதோடு நாளும் “நீறாடினால்’ உள்ளமும் தூய்மையாகும். நீறு என்றால் திருநீறு. இதைவிட உயர்ந்த பொருள் வேறு இல்லை என்பதை திருஞானசம்பந்தர் “மந்திரமாவது நீறு’ என்று தொடங்கும் திருநீற்றுப்பதிகத்தில் விரிவாகக் கூறியுள்ளார். பசுவின் சாணத்தை புடமிட்டே திருநீறான விபூதியைத் தயாரிக்கிறார்கள். திருநீற்றினை அணியாதவர்களை “நீறில்லா நெற்றி பாழ்’என்கிறார் அவ்வைப் பாட்டி. நீராடிய பின் பக்தியோடு திருநீற்றுப்பதிகம் சொல்லி திருநீறைப் பூசிக் கொண்டால் எல்லா நன்மைகளும் பெருகும் என்கிறார் திருஞானசம்பந்தர்.
கோதூளி லக்னம்: பசுவின் பாதத்தூளி (பாதம் பட்ட தூசு) மிகவும் உயர்ந்தது என்று மகான்கள் சொல்லியிருக்கிறார்கள். பசுக்கள் மேய்ந்து விட்டு, கொட்டிலுக்குத் திரும்பும் போது, அதன் குளம்படிகள் பட்டு எழுகின்ற புழுதிப்படலம் நம் மீது படுவது மிகுந்த நன்மை தரும். கங்கை போன்ற புண்ணியநதிகளில் நீராடியதற்குச் சமம். திருமால், பாலகிருஷ்ணனாக கோகுலத்தில் வசித்த போது, பசுக்கள் எழுப்பிய தூசில் திளைத்தாடியதால் “கோதூளி தூஸரிதன்’ என்று அவருக்கு பெயர் உண்டு. கோதூளி பட்டதால் தான் பாலகிருஷ்ணனுக்கு சவுபாக்கியங்களும், அழகும் உண்டானதாக ஆதிசங்கரர் பாடுகிறார். பசுமாடுகள் மேய்ச்சலை முடித்த கொட்டிலுக்கு திரும்புகிற மாலை வேளையை “கோதூளி லக்னம்’ என்பர். இவ்வேளையில் செய்யும் செயல்கள் யாவும் நன்மை தரும் என்றும், விரைவில் நிறைவேறி பலன்தரும் என்றும் ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது.
பால்வளம் பெருக்கும் வழிபாடு: விஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்து, கோபாலன் என்ற பெயரில் ஆயர்பாடியில் வசித்தார். அவர் பசுக்களோடு இரண்டறக் கலந்து உறவாடி மகிழ்ந்தார். பெருமாளுடைய அவதாரங்களில் பூர்ணாவதாரம் எனப்படும் கிருஷ்ணாவதாரமே முழுமையானது. கிருஷ்ணனின் வரலாறு சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன் மழையாய் இனித்திடும் என்பார்கள் பாகவதர்கள். வேணுகோபாலன் பசுக்களை மேய்த்தபோது அவருடைய புல்லாங்குழல் நாதம் கேட்ட பசுக்கள் தங்களையும் மறந்து பகவானின் இடதுபாதத்தை ருசித்து ஆனந்தம் கொண்டன. இதை உணர்த்தும் வகையில் பூமியில் இடதுபாதத்தை ஊன்றச் செய்து, அதை பசுஒன்று தன் நாவினால் சுவைப்பது போல சித்திரத்தை வரைந்திருப்பர். இந்தக் கோலத்தில் கிருஷ்ணரை வழிபட்டால் வீட்டில் பால்பாக்கியம் பெருகி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
கைப்பிடி புல்லாவது கொடுங்க! கோபூஜையை எல்லாரும் செய்ய முடியாது. ஆனால், கோகிராஸம் என்பதை நாம் அனைவரும் எளிதாகச் செய்யமுடியும். இதனை திருமந்திரத்தில் திருமூலர் “”பசுவுக்கு ஒரு வாயுறை” என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருநாளும் பசுமாட்டிற்கு ஒரு கையளவு பசும்புல்லாவது கொடுப்பதை “”கோகிராஸம்” என்கிறது தர்மசாஸ்திரம். இதனால் நமக்கு அளவில்லாத பெரும்புண்ணியம் உண்டாகும். குறிப்பாக பசுமாடு விரும்பி உண்ணும் அகத்திக்கீரை, பசும்புல், வாழைப்பழம் போன்றவற்றில் நம்மால் முடிந்ததை உண்ணக் கொடுக்க வேண்டும். இச்செயலால் நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
குறிச்சொற்கள்: திராவிடர்கள், நாத்திகம், மடத்தனம், மாட்டுக்கறி, மாட்டுக்கறி தின்பது, மாட்டுப் பொங்கல்
மறுமொழியொன்றை இடுங்கள்