பிராமணீயத்தை ஒழிப்பதென்றால் என்ன?

வரலாற்றுச் சுவடுகள்: பிராமணீயத்தை ஒழிப்பதென்றால் என்ன?

‘குடிஅரசு’. கட்டுரை, 19.09.1926

http://viduthalai.periyar.org.in/20091227/news21.html

கும்பகோணத்து பிராமணனின் லஜ்ஜையும் சீற்றமும்

பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்-களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும் பிச்சைச் சாமான்களையும் நிறுத்து-வதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப்பிராயப் படுவதாகக் கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால் வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதாரும், சில பார்ப்பனரும், பார்ப்பனப் பத்திரிகைகளும், பிராமணன் என்கிற பார்ப்பன வருணாசிரம தர்ம பத்திரிகையும் கூச்சல் போடு-கின்றதுகள். பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம் எந்தக் கருத்தின் பேரில் தொடங்கினோம் என்றால் நம்மைவிடப் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று எண்ணுவதும், அவன் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சக சாஸ்திரங்களையும், பொய்ச் சுருதிகளையும், புரட்டு ஆகமங்களையும் நம்புகிற மூடநம்பிக்கையையும் நமது மனதை விட்டு அகற்றுவதும், நம்மை விடப் பஞ்சமன் என்பவன் தாழ்ந்தவன் என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான் முதன்மையாகக் கருதித் தொடங்கினோமேயல்லாமல் வேறல்ல.

உதாரணமாகப் பார்ப்பனனை நாம் ஏன் சுவாமி என்று கூப்பிட வேண்டும்? அவனைக் கண்டால் நாம்தான் முதலில் கும்பிட வேண்டும் என்கிற மனப்பான்மை நம்மிடத்தில் ஏன் இருக்க வேண்டும்? பார்ப்பனரும் ஏன் அதை எதிர்பார்க்க வேண்டும்? அவனுக்குப் பணம் கொடுப்பதும் சாப்பாடு போடுவதும் புண்ணியம் என்று ஏன் நாம் நினைக்க வேண்டும்? இது போன்ற பல உயர்வுகள் நம் போன்ற நம்மிலும் பல வழிகளில் தாழ்ந்தவான-யிருக்-கிறவனுக்கு பார்ப்பனனாகப் பிறந்தான் என்கிற காரணத்திற்காக ஏன் கொடுக்க வேண்டும்? அல்லா-மலும் நம்மை விட எந்த விதத்திலும் தாழ்மை-யில்லாதவனையும் நம்மிலும் பல விதத்தில் உயர்குணங்கள் கொண்டவனையும் போலிப் பிறவிக் காரணமாக நாம் ஏன் தாழ்ந்தவன் என்று சொல்ல வேண்டும்? அவன் நம்மைக் கும்பிடும்படி ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்? ஒருவனை நாம் தொட்டால் தோஷம் என்று நாம் ஏன்நினைக்க வேண்டும்? ஆகிய இப்பேர்ப்பட்டதான அஞ்-ஞானத்தை, மூட நம்பிக்கையை, கொடுமையை, அகம்பாவத்தை, கொலை பாதகத்தை, வஞ்கத் தத்துவத்தை ஒழிப்பதல்லாமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர் மேல் துவேஷங் கொண்டு செய்வதல்ல என்பதை உறுதியாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம். உதாரணமாக, பார்ப்பனனுக்குப் பிச்சைக் கொடுப்பதை நாம் வேண்டாமென்று சொல்ல வரவில்லை.

ஆனால் அவனுக்குக் கொடுப்பது புண்ணியம்; மோட்சத்திற்குக் கொடுக்கும் விலை என்கிற மூடநம்பிக்கையின் பேரில் கொடுத்து ஏமாறாதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம். கஞ்சிக்கில்லாமல் கஷ்டப்படுகிறான், பாடுபட்டுத் தின்பதற்கு யோக்கியதை இல்லா நிலையில் இருக்கிறான் என்று காணப்பட்டால் கண்டிப்பாய் அவனுக்கு உதவ வேண்டியது மனித தர்மமென்றே சொல்லுவோம். இந்நிலை பிராமணனிடம் கண்டாலும் சரி பஞ்சமனிடம் கண்டாலும் சரி உடனே உதவ வேண்டியது மனிதனின் ஆண்மையிலும் சுயமரியாதையிலும் பட்டதென்று கூடச் சொல்லுவோம். உப்பற்ற கஞ்சி கண்டு 8 நாள் ஆன மனிதன் தெருவில் உயிர் போகுந் தருவாயில் இருக்கும் போது பாயாசத்திற்கு குங்குமப்பூ போதவில்லை; அக்கார-வடிசிலுக்குப் பச்சைக் கற்பூரம் போதவில்லை என்ன சமாராதனை செய்து விட்டான் உலோபிப் பயல் என்று சொல்லுகிற காளைத் தடியர்களுக்கு சாப்பாடு போடுவது தர்மம் என்று எண்ணுகிற முட்டாள்தனத்தை விட வேண்டும் என்பதையும்தான் பிராமணீயத்தில் இருந்து விடுபட்டதென்று சொல்லுகிறோம்.

பிராமணன் என்கிற ஒரு பத்திரிகை பஞ்சாங்கப் பிராமணர்களை உண்மைப் பிராமணர்கள் தாழ்வாய்க் கருதுவதாவும் அவர்களுக்கு அவ்விழிதொழில் கூடாதென்றும், அவர்கள் வேறு தொழிலில் பிரவேசிக்க வேண்டுமெனறே தான் விரும்புவதாகவும் ஜம்பமாய் எழுதிவிட்டுப் பார்ப்பனர் இவ்விழிதொழில் செய்வதற்குப் பார்ப்பனரல்லாதார் காரணதராயிருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் தமிழ்நாடு பத்திரிகை மீது சீறி விழுவதன் காரணம் இன்னதென்று தெரியவில்லை.

தவிர பார்ப்பனர்களில் இவ்விழி தொழிலில் ஜீவித்து வருபவர்கள் பதினாயிரத்தி லொருவர்கூட இல்லை என்றும், மற்றவர்கள் எல்லாம் கவுரவமான தொழிலில் வாழ்கிறார்கள் என்றும் ஜம்பம் பேசிக் கொள்ளுகிறது. ஆனால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளோ ஏதோ பதினாயிரத்தில் ஒருவர்தான் உத்தியோகம், காப்பி ஓட்டல் முதலிய இழி தொழில்களில் இருக்கிறார்கள்; மற்றவர்கள் எல்லாம் மகா பரிசுத்த பிராமணீயத் தொழிலாகிய பஞ்சாங்கத் தொழிலில் இருக்கிறார்கள்; அவர்களிடத்தில் பார்ப்பனரல்லாதாருக்குத் துவேஷம் ஏன் இருக்க வேண்டும்? என்று பேசியிருக்கிறார். ஆதலால், உத்தமமான தொழில் இன்னது, இழி தொழில் இன்னது என்பவைகளிலேயே இவ்விரு பார்ப்பனர்-களுக்கும் வித்தியாசமிருப்பதால் நாம் இதில் கலந்து கொள்ள இஷ்டமில்லை. ஆனாலும் பதினாயிரத்தில் ஒருவன்தான் பஞ்சாங்கப் பிராமணன் என்பதை மாத்திரம் நாம் மறுக்கிறோம்.

இன்றைய தினம் உத்தியோக முறையில் உயர்ந்த ஸ்தானம் வகித்தும், மாதம் பதினாயிரம் இருபதினாயிரம் சம்பாதித்து வரும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவரான ஸ்ரீமான்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள், நரசிம்மேஸ்வர சர்மா அவர்கள், சி.பி.இராமசாமி அய்யர் அவர்கள், எ.சீனிவாசய்யங்கார் அவர்கள், டி.ஆர்.வெங்கிட்டராம சாஸ்திரிகள், மகாமகாகனம் பட்டம் பெற்ற ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், சர்.சிவசாமி அய்யர் அவர்கள் முதலியவர்கள் உட்பட அநேக சாதாரண உத்தியோகப் பிராமணர்களும், அரசியல் பிராமணர்களும், சன்னிதானங்கள், மடாதிபதிகள், மகந்துகள் என்று சொல்லத்தகுந்த பல வைதீகப் பிராமணர்களும், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சந்ததிகள், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் பிள்ளைகள், பலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சகோதரர்கள், பலர் உத்தியோகத்திலும். வைதீகத்திலும், பஞ்சாங்கத்திலுமாக மூன்றிலும் வயிறு வளர்க்கிறவர்கள் என்பதை மாத்திரம் தெரியப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

பிராமணன் உண்மையிலேயே இந்த இழி தொழிலாகிய பஞ்சாங்கத் தொழிலைச் செய்வதிலிருந்தும் மூட நம்பிக்கையில் பார்ப்பன ரல்லாத மக்களை இறக்கி அவர்களால் வயிறு வளர்க்கும் தொழிலிலிருந்தும் பிராமணர்களைக் கடைத் தேற்றி பிராமணன் சொல்லுகிறபடி அவர்களை கவுரவமான வாழ்க்கையில் நடக்கும்படிச் செய்யும் பிரச்சாரத்திற்கு நம்மையும் அழைத்தால் நாமும் ஒத்துழைக்கத் தயாராயிருக்-கிறோம்.

நாம் பிராமணீயத்தை விட்டவர்கள் பெயர்-களைப் போட்டு வருவது போலவே பஞ்சாங்கத் தொழிலாகிய இழிதொழிலை விட்ட பிராமணர் பெயர்களையும், வாரா வாரம் பிராமணன் பத்திரிகை கொண்டு வெளி வருவானானால் நாம் பிராமணனை மிகுதியும் போற்றுவோம். அதில்லாமல் எழுத்தில் மாத்திரம் காட்டுவதில் என்ன பயன்? தாசிகளைக் கேட்டால்-கூட அவர்கள் தங்கள் தொழில் இழி தொழிலென்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் இருட்டான-வுடன் தெருவில் நடப்பவனைப் பார்த்துக் கண்ணடிப்பதில் பின் வாங்குவதில்லை. வக்கீல்களும் அது போலவே தங்கள் தொழிலை இழி தொழில் என்று ஒப்புக் கொள்ளுகிறார்கள்.

ஆனால் தாசிகள் புருஷர்களைத் தேடுவது போல் வாயிற்படியிலும் ரயில்வே பிளாட்பாரத்திலும் காத்திருந்து கட்சிக்காரர்களைத் தேடுவதில் குறைவில்லை. அதுபோல பிராமணனும் பஞ்சாங்கத் தொழில் இழி தொழில் என்று வாயில் ஒப்புக் கொண்டதைப் பற்றி நாம் மிகுதியும் சந்தோஷப்பட முடியவில்லை. அது காரியத்தில் காட்டி தனது சமூகத்தாருக்கு அத்தொழில் இல்லாமல் செய்ய பிரயத்தனப் படுவானானால் அத்தொழிலின் பலனாய் மூட நம்பிக்கையில் ஈடுபட்டுச் சுயமரியாதை இன்றிக் கிடக்கும் கோடிக் கணக்கான பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சுயமரியாதைக்கு வழிகாட்டின பலன் பார்ப்பனர்களுக்குக் கிடைக்குமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

_ ‘குடிஅரசு’. கட்டுரை, 19.09.1926

Advertisements

3 பதில்கள் to “பிராமணீயத்தை ஒழிப்பதென்றால் என்ன?”

 1. vedaprakash Says:

  வரலாற்றுச் சுவடுகள்
  சங்கரநாராயணர் கோவிலுக்குள் கக்கூசும் மிதியடியும்
  http://viduthalai.periyar.org.in/20100117/news14.html

  திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரன்-கோவிலென்னும் சங்கரநாராயணன் கோவிலானது அச்சில்லாவில் உள்ள முக்கிய கோவில்களுள் ஒன்று. அக்கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் வரும்படி உண்டு.
  லோககுரு என்றும் சங்கராச்சாரியார் சுவாமிகள் என்றும் சொல்லப்பட்ட ஸ்மார்த்தர்களின் குருவானவர் இம்மாதம் அவ்வூருக்கு வந்து அக்கோவிலை தனக்கும் தனது பரிவாரத்திற்கும் ஜாகையாக வைத்துக் கொண்டார். அதோடல்லா-மல் சுவாமிகளின் திருக் கக்கூசும் அக்கோவி-லுக்குள்ளாகவே கட்டப்பட்டு சுவாமிகளின் திருமலமும் கோவிலிலேயே சமர்ப்பிக்-கப்-பட்டுவிட்டது.
  அக்கோவில் டிரஸ்டி கனவான்களில் பார்ப் பனரல்லாதார் அதிகமாய் (மெஜாரிட்டியாய்) இருந்தும் இதை ஆட்சேபிக்கத் தைரியமில்லை. ஏனென்றால் அவ்வூர் அதிகாரிகள் எல்லாம் குட்டி சுவாமிகள் குழாங்களாகவே இருக்கின்றன. அதோடு மாத்திரமில்லாமல் ‘‘சுவாமிகள்’’ சங்கரநாராயண சுவாமியை திருக்கண் பார்ப்பதாயிருந்தாலும், திரு மிதியடியை தாங்கிய திருப்பாதத்துடனேதான் மூலஸ்தானத்திற்குப் போய் திருக்கண் பார்த்தருளினாராம்.
  அதோடு மாத்திரமல்லாமல் ‘‘சுவாமிகள்’’ கோவிலுக்குள் நுழையும் போது திருமேனாவில் திருப்பள்ளி கொண்ட கோலத்துடனேயே சென்றாராம். ‘மாமிக்கோர் மாமியுண்டானால் சுவாமிக்கோர் சுவாமி வேண்டாமா?’ அதுதான் நமது ‘‘லோக குரு சங்கராச்சாரியார், சுவாமிகள் போலும்!’’ சுவாமிகளின் இந்த வைபவங்களையும், தெய்வத் தன்மையையும் கண்ட திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி கோவில் பக்தர்களும், தர்மகர்த்தாக்களும் குறைந்தபட்சம் நெல்லையப்பர் கோவிலுக்குள் சுவாமிகளின் திருக் கக்கூசாவது கட்டப்படாமல் இருக்கவேண்டுமென்று கருதி லட்சக்கணக்கான துண்டு விளம்பரங்கள் போட்டும் தர்மகர்த்தாக்களுக்கு நோட்டீசு விட்டும் சத்தியாக்கிரகம் செய்வதாய் பயமுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து சுவாமிகளின் திருக் கக்கூசை திருக் கோவிலுக்குள் கட்டாமலிருக்க தக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.
  இது தவிர, நெல்லையப்பர் சுவாமி கோவிலுக்கு முன்னால் சங்கராச்சாரிய சுவாமிகள் வருகையை முன்னிட்டு போடப்பட்ட அலங்காரப் பந்தல்கள் போட அனுமதித்ததின் பலனாய் அஷ்டமி உற்சவத்தின்போது நெல்லையப்பர் சுவாமி எழுந்தருளுகையில் பந்தல் சமீபம் வந்தவுடன் தாழ்ந்தும் குனிந்தும் வெளியே வரவும் உள்ளே போகவும் ஏற்பட்டது. இதைப் பற்றி பல பக்தர்-களுக்கு மனவருத்தமிருந்தாலும் சங்கராச்சாரிய சுவாமிகளும் அவரது திருக் கூட்டத்தாரும் இல்லாவிட்டால் நெல்லையப்பருக்கு இவ்வளவு மகத்துவமும், இவ்வளவு வேலி நிலமும், இவ்வளவு சொத்துக்களும் சுகங்களும் ஏது? ஆதலால் ‘‘சங்கராச்சாரிய சுவாமிகளின்’’ பந்தலுக்கு நெல்லை-யப்பர் தாழ்ந்து குனிந்து வணங்க வேண்டியதுதான்.

  _- ‘குடிஅரசு’, கட்டுரை, 05.12.1926

  பொய் பொய் முற்றும்
  பொய் ஆனால் மெய் மெய் முற்றும் மெய் எங்கே?

  ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் அவர்கள் தேர்தல்கள் விஷயத்தில் பார்ப்பனரல்லா-தார்-களுக்கு விரோதமாகவும், பார்ப்பனர்களுக்கு அனுகூலமாகவும், தேசபக்தியைச் சாக்காகக்காட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வந்ததை பல தடவைகளில் நாம் பலமாய்க் கண்டித்திருப்பது நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்.
  கடைசியாக ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியாருக்கு விரோதமாக செங்கல்பட்டு ஜில்லாவில் பாமர மக்களிடையில் போய், சீமையிலுள்ள மனிதர்களுக்கு சராசரி வயது 50 என்றும், நமது நாட்டிலுள்ள மக்களுக்கு சராசரி வயது 25 என்றும், அதற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியும், எ.ராமசாமி முதலியாரும்தான் என்றும், ஆதலால் அவருக்கு ஓட்டுச் செய்ய வேண்டாம் என்றும் இன்னமும் இதுபோல் பல விஷயங்கள் பேசியதாக பத்திரிகைகளில் பார்த்து கண்டித்தெழுதி இருந்தோம்.
  அது சமயம் நான் அப்படிப் பேசவில்லை என்றும், பார்ப்பனர்கள் தங்கள் பத்திரிகையில் அப்படி எழுதிக் கொண்டார்கள் என்றும் அவர் சொன்னார். அதற்குப் பிறகுகூட ஸ்ரீமான் சக்கரை செட்டியாருக்கு விரோதமாய்த் தொழிலாளர் சங்கங்களுக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரையே ஆதரிக்க வேண்டுமென்று ஸ்ரீமுகமும் அனுப்பினார். இதை ‘சுதேசமித்திரன்’ முதலிய பத்திரிகைகள் பிரசுரித்திருந்ததோடு பார்ப்பனர்கள் அதைத் துண்டுப் பிரசுரங்களாகவும் வழங்கினார்கள். இதைப் பற்றியும் நாம் எழுதினால் இதற்கும் ஏதாவது சமாதானம் சொல்லுவாரென்றே கருதி சும்மாயிருந்தோம்.
  கடைசியாக ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் தேர்தலில் வெற்றிபெற்ற தமது வீரப்பிரதாபத்தை முழக்கி வெற்றிச் சங்கு ஊதுகையில் ஸ்ரீமான்-களான வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர-முதலியார், ராமசாமி நாயக்கர் முதலிய எத்தனையோ பார்ப்பனரல்லாதார் எதிர்த்தும் வெற்றி பெற்றுவிட்டேன் என்று எழுதி இருந்தார்.
  இதைப் பார்த்ததும் வந்துவிட்டது கோபம் நமது முதலியாருக்கு! எழுந்தார் பேனாக் கோடாலியைப் பிடித்தார்! பொய் பொய் முற்றும் பொய் என சத்தியமூர்த்தியைப் பிளந்தார். ஏன்? பார்ப்பனத் தலைவர் நமது சத்தியமூர்த்திகளேயாவர். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப்பட்டம் பெற்றால்தான் மற்ற ரிஷிகள் மதிப்பார்கள். அப்படிப்போல ஸ்ரீமான் சத்தியமூர்த்தி வாயால் திரு. முதலியார் அவர்களைப் புகழாவிட்டாலும் இகழாமலாவது இருந்தால்தான் பார்ப்பனர்கள் முதலியாரைத் திரும்பியாவது பார்ப்பார்கள்.
  ஆதலால் சத்தியமூர்த்தியைப் பிளக்க வேண்டிய அவசியம் வந்து, என்ன எழுதினார் என்றால், தான் தேர்தல் பிரசாரத்தில் கலவாது இருந்தாலும்-கூட தேர்தலுக்கு 2 நாள் முன்னதாகக் கூட ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரை ஆதரித்துக் கூறிய உரைகள் பல பத்திரிகைகளில் வெளியாயிற்று. அவ்வுரைகள் துண்டுப் பிரசுரங்களாகவும் விளங்கிற்று……
  ஆதலால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் கூற்று, பொய் பொய் முற்றிலும் பொய் என்று சாட்சி ஆதாரங்களுடன் பிளந்திருக்கிறார். அப்படி-யானால் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தேர்தலில் கலவாது இருக்கப் போவதாகச் சொன்னதும் சுயராஜ்யக் கட்சியாலும் கட்சித் தலைவர்களாலும் வகுப்புப் பூசலும் வகுப்பு-வாதமும் நமது நாட்டில் எற்பட்டது என்றதும் அரசியல் சங்கங்களை வளரவிடுவது நாட்டிற்குக் கேடு என்றதும் நம்மவர்களுக்கு விரோதமாகவோ பார்ப்பனர்களுக்கு அனு-கூலமாகவோ வேலை செய்யவில்லை என்றதும் மெய், மெய், முற்றும் மெய் என்று சொல்வ-தற்குச் சாட்சி ஆதாரமெங்கே என்று கேட்-கிறோம்.

  _ ‘குடிஅரசு’, துணைத்தலையங்கம், 05.12.1926

 2. vedaprakash Says:

  மத விஷயத்தில் சர்க்காரைப் பிரவேசிக்கச் செய்யாத பார்ப்பனர்கள்
  தேவார பாராயணத்திற்கு தடை உத்தரவு (இஞ்சங்ஷன்)

  நமது பார்ப்பனர்கள் தென்காசி கோவிலில் சுவாமியுடனும், தேவாரத்துடனும் ஒத்துழையா-மையும் பஹிஷ்காரமும் செய்ய நேர்ந்தது போலவே சங்கரன் கோவிலிலும் செய்ய நேரிட்டுவிட்டால், தங்கள் வரும்படிக்கு ஆபத்து வந்துவிடுமே எனப் பயந்து சங்கரன்கோவில் டிஸ்டிரிக்ட் முனிசீப்பு கோர்ட்டில் வியாஜ்ஜியம் தொடுத்து தங்களுக்கு பிரசாதம் கொடுக்காததற்கு முந்தி தேவாரம் படிக்கக்கூடாது என்று (இஞ்சங்ஷன்) தடை உத்தரவு வாங்கி-விட்டார்களாம். கோவில் அதிகாரிகள் அதை அப்பீல் செய்ய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இந்துமத சம்பந்தமான விஷயத்தில் சர்க்காரார் மூலமாய் நமது இந்துக்கள் பணங்காசுக்கு வரவு செலவு கேட்பதுகூட இந்து மதத்தில் சர்க்காரை பிரவேசிக்க விட்டுவிட்டார்கள் என்று மாய்மாலக் கண்ணீர் விடும் நமது பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்வதை நிறுத்த சர்க்காரிடம் போயிருப்பதும், இந்துக்கள் அல்லாதவர்கள்கூட ஒரு சமயம் இதற்கு தீர்ப்பு எழுதும்படியாகச் செய்வதும், இந்துமதத்தில் சர்க்காரை நுழைய விட்டதல்ல போலும்! ஏன்? பார்ப்பனர் கோர்ட்டுக்கு போனால் மதபக்தி; பார்ப்பனரல்லாதார் கணக்கு கேட்டால் மதத் துரோகம் போலும்!

  _- குடிஅரசு, செய்திக்குறிப்பு, 05.12.1926

 3. vedaprakash Says:

  வரலாற்றுச் சுவடுகள்; காரணமென்ன? (திராவிடன்)
  http://viduthalai.periyar.org.in/20100124/news16.html

  பார்ப்பனரல்லாதார் ஒருவர் எத்துணை அறிவிற் சிறந்தவராயினும், பேசுவதில் வல்லவராயினும் அரும் பெருந்தியாகம் செய்தவராயினும் அவரைச் சென்னைப் பத்திரிகைகள் புகழமாட்டா! ஆனால் ஒரு பார்ப்பனர், எவ்வளவு இழிந்தவராயினும் அவரை வானமளாவப் புகழ்தற்கு இச்சென்னைப் பத்திரிகைகள் அஞ்சுகின்றனவல்ல. அதற்குக் காரண மென்னையெனின், சென்னையில் இருக்கும் பத்திரிகைகளில் பெரும்பாலன அய்யர், அய்யங்கார்கள், பத்திரிகைகள், அவைகள் இந்தியர் பணத்தில் வெளிநாடு சென்று, இந்தியர்கள் பிறப்புரிமைகளை விற்ற கனம் சாஸ்திரிகளை வானமளாவப் புகழும்.

  அவைகள் சர்.சி.பி. இராமசாமி அய்யர் ஆகாயக் கப்பலில் போனார், இங்கே விருந்துண்டார், அங்கே விருந்துண்டார், என்று தனி நிருபர்களின் தந்திகளைப் பத்தி பத்தியாய் வெளியிடும். அம்மட்டோ! ஒரு விஜயராகவாச்-சாரியார் அமெரிக்காவுக்குச் சென்று தன்மகள் வெள்ளைக்காரப் பெண்களைப் போன்று மயிர் கத்தரித்துக் கொள்ள விரும்புகின்றாள்; இந்தியாவில் தென்னை மரமிருக்குமட்டும் குடியை நிறுத்த முடியாது என்று பேசுவராயின், உடனே இப்பார்ப்பனப் பத்திரிகைகள் மனமகிழ்ச்சியுடன் இவைகளை எல்லாம் வெளி-யிடு-கின்றன. சாஸ்திரிகளைக் குறித்தும், ஆச்சாரி-களைப் பற்றியும் இவ்வளவு புகழ்ந்தெழுதிய பார்ப்பனப் பத்திரிகைகள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு இந்தியர்கள் சம உரிமையுடன் நடத்தப்படல் வேண்டுமென வாதாடிய திரு.-ஆர்.கே. சண்முகம் செட்டியார் பயணப்பட்டதைக் குறித்தும், அவர் அங்கு நிகழ்த்திய அரும்பெரும் சொற்பெருக்குகளைக் குறித்தும் யாதொன்றும் வெளியிட்டனவல்ல. திரு. சண்முகம் செட்டியார் கனம் சாஸ்திரிகளைப் போன்று இந்தியர்கள் பணத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, இந்தியர்கள் பிறப்புரிமையை விற்றனரல்லர். அவர் ஆஸ்திரேலியாவுக்குத் தம் சொந்தச் செலவில் பயணப்பட்டு, அங்கு இந்திய மக்களின் நாகரிகத்தை எடுத்துரைத்து,

  பொதுவாக கறுப்பு மனிதர்கள் தாழ்ந்த-வர்களென்றும், அதிலும் முக்கியமாக இந்தியர்கள் தாழ்ந்தவர்களென்றும் பேசுகின்றவர்களுக்கு எங்களுடைய புராதனமான நாகரிகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. தாழ்ந்தவர்கள் என்று சொல்வதைக்கூட எங்கள் ஜனங்கள் எவ்வளவு பலமாக வெறுக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவில்லை போலும். பக்தி வாய்ந்த கிறிஸ்தவர்களடங்கிய கூட்டத்தில் பேசுவதாக நான் நம்புகிறேன். ஏசுநாதர் கறுப்பு மனிதரைப் பற்றி என்ன கூறினார் என்பதை உங்களுக்கு நான் எடுத்து ஞாபக மூட்டட்டுமா? இப்படியிருக்க ஒரு தனிப்-பட்ட நபர் அல்லது ஜாதியார் இவர்களின் நிறத்தால் எப்படி ஏற்றத் தாழ்வு வந்துவிடுமென்று நீங்கள் கூறக்கூடும்? 3 கண்டங்களின் போர்க்-களங்களில் எங்களுடைய தீரர்கள் உங்களுடைய தீரர்களுடன் தோளோடு தோள் கொடுத்து நின்று எதிரிகளுடன் தீரமாகப் போராடி மடிந்திருக்-கிறார்கள். (கரகோஷம்) உங்களுடன் மடிவதற்குச் சமமாக இருக்க இலாயக்குள்ள நாங்கள் உங்-களுடன் சமமாக வாழ்வதற்கும் தகுதியுடையவர்-களல்லவா?

  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பல பெரிய பெரிய காரியங்களைச் சாதித்திருக்கின்றது.

  கலைகளிலும் நாகரிகங்களிலும் வித்தியாசப்பட்ட பல ஜாதியர்களிலும் ஒருங்கு சேருவதற்கு அது சந்தர்ப்பத்தை அளித்ததே என் மனதிற்கு எல்லாக் காரியங்களையும் விடச் சிறந்ததாகும் என நான் நினைக்கின்றேன். (சபாஷ்! சபாஷ்!!) ஏகாதிபத்தியத்-திற்குள் இந்தியா இருந்தால்தான் அத்தகைய சந்தர்ப்பம் ஏற்படும். ஆட்சி பெற்றுத் திருப்தியுடன் இருந்துவரும் இந்தியாதான் ஏகாதிபத்தியத்திற்கு மிக்க பலத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும். ஏகாதிபத்தியமானது உன்னதமான இலட்சியங்-களுக்காக ஏற்பட்டிருக்கின்றது. அதற்குச் சிறந்த சம்பிரதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சிறந்த இலட்சிகளையும் இப்புனிதமான சம்பிரதாயங்-களையும் ஏற்றுப் பாதுகாக்கின்றவர்கள் என்ற பெருமை எங்களுக்கு உண்டாகும்படி செய்யுங்கள். இதுதான் எங்களுடைய பெரிய அவா. இது விஷயத்தில் நீங்கள் அனுதாபம் கொண்டு யோசிக்க வேண்டும். நான் உங்கள் நாட்டைவிட்டு இந்தியா-விற்குச் சென்று அன்பும் சுதந்திர தாகமும் கொண்ட ஆஸ்திரேலியர் இந்தியர்களுடன் சினேகமாக வரத்தயாராக இருக்கிறார்கள் என்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் அங்கத்தினராக இருப்பதற்குரிய பொறுப்புகளை ஏற்பதுடன் அதற்குள்ள உரிமைகளில் கலந்து கொள்ளவும் சந்தோஷமாக அழைக்கிறார்கள் என்றும் இந்தியரிடம் கூறி, உங்கள் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கலாம் என்று இந்திய மக்கள் சமத்துவமாய் நடத்தப்படல் வேண்டுமெனப் பேசியிருக்கின்றார். அவரைப் பற்றி ஆஸ்திரேலியா பத்திரிகைகள் புகழ்ந்து பேசியிருக்க, இத்தென்னாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் ஒன்றும் எழுதினவல்ல. திரு.ஆர்.-கே.சண்முகம் செட்டியார் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவராய் இருந்தும், பார்ப்பனப் பத்திரிகைகட்கு அவரைக் குறித்து எழுத மனமில்லை. காரணமென்? திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் பார்ப்பனரல்ல; அவர் பார்ப்பனரல்லாதார்.

  _- குடிஅரசு, 05.12.1926

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: